
பணக் கடன் கொடுக்கும் நிறுவனங்கள் கடனை கடுமையான நடவடிக்கைகள் மூலம் வசூலித்தால் 5 ஆண்டுகள் சிறை, ரூ. 5 லட்சம் அபராதம் விதிக்கும் மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஏப்ரல் மாதம் நிறைவடைந்தது. ஏப்ரல் இறுதியில், பணக் கடன் வழங்கும் நிறுவனங்கள் கடனை வசூலிப்பதில் கடுமையான செயல்களை, நடவடிக்கையைக் கடைபிடித்தால், சட்டவிரோதமான செயல்களில் ஈடுபட்டால் 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூ. 5 லட்சம் அபராதம் விதிக்கப்படும் வகையில் சட்டப்பேரவையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தாக்கல் செய்த இந்த மசோதாவானது இதே கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்டு, ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி இன்று ஒப்புதல் அளித்துள்ளார். இதன்மூலம், பணக் கடன் வழங்கும் நிறுவனங்கள் கடனை வலுக்கட்டாயமாக மிரட்டி கடுமையான நடவடிக்கைகள் மூலம் வசூலித்தால் 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ. 5 லட்சம் அபராதம் எனும் மசோதாவானது சட்டமாகியுள்ளது.
இச்சட்டத்தின்படி, பதிவுச் சான்றிதழ் பெறாமல் கடன் வழங்கினால், 3 ஆண்டுகளை சிறைத் தண்டனை மற்றும் ரூ. 1 லட்சம் அபராதம் விதிக்கப்படும். வலுக்கட்டாயமான நடவடிக்கையால் கடன் பெற்றவர்கள் அல்லது அவர்களுடைய குடும்பத்தினர் யாராவது தற்கொலை செய்துகொண்டால், அது குற்றமாகக் கருதப்படும்.
இதேபோல மருத்துவக் கழிவுகளைப் பொது இடங்களில் கொட்டினால், சம்பந்தப்பட்டவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வழிவகை செய்யும் சட்ட மசோதாவும் கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்டது. இதுவும் ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பிவைக்கப்பட்ட நிலையில், ஆளுநர் ஆர்.என். ரவி இந்த மசோதாவுக்கும் ஒப்புதல் அளித்துள்ளார்.