
சென்னை பூந்தமல்லியில் மெட்ரோ ரயில் 2-ம் கட்டத் திட்டத்தில் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது.
சென்னை பூந்தமல்லியில் மெட்ரோ ரயில் 2-ம் கட்டத் திட்டத்தில் ஓட்டுநர் இல்லாமல் மெட்ரோ ரயில்களை இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
பூந்தமல்லி மெட்ரோ ரயில் பணிமனையிலிருந்து முல்லைத்தோட்டம் வரை சுமார் 2.5 கி.மீ. தூரத்துக்கான ஓட்டுநர் இல்லா சோதனை ஓட்டம் நடைபெற்றது. இதுதொடர்பான காணொளியை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் விரிவாக்கத்தின் ஒரு பகுதியாக, இரண்டாம் கட்டத் திட்டத்தின் கீழ் 118.9 கி.மீ. நீளத்திற்கு மூன்று வழித்தடங்களில் 128 மெட்ரோ நிலையங்கள் அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
சென்னை மெட்ரோ ரயிலின் 2-ம் கட்டத் திட்டப் பணிகள், மாதவரம் - சிறுசேரி வரையிலான 3-வது வழித்தடம் (45.4 கி.மீ.), கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி பைபாஸ் வரையிலான 4-வது வழித்தடம் (26.1 கி.மீ.), மாதவரம் - சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடம் (44.6 கி.மீ.) என 3 புதிய வழித்தடங்களில் நடைபெற்று வருகின்றன.
இதில், கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி பைபாஸ் வரையிலான 4-வது வழித்தடத்தில் உள்ள பூந்தமல்லி - போரூர் சந்திப்பு இடையிலான மெட்ரோ சேவை, வரும் டிசம்பர் மாதத்தில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பூந்தமல்லி புறவழிச்சாலை முதல் போரூர் சந்திப்பு வரையிலான உயர்மட்ட வழித்தடம் அமைக்கும் பணிகள் மார்ச் 8 அன்றுடன் நிறைவுபெற்றதாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்தது.