

தமிழ்நாட்டில் பழைய ஓய்வூதிய திட்டம் தொடர்பாக டிசம்பர் 3 அன்று முதலமைச்சர் முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என்று அரசு ஊழியர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
சம வேலைக்கு சம ஊதியம், பழைய ஓய்வூதியத் திட்டத்தை கொண்டு வருதல், புதிய பணியிடங்களை உருவாக்குதல் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ - ஜியோ; அனைத்து அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சி பணியாளர்கள் கூட்டமைப்பான, போட்டோ - ஜியோ சார்பில், போராட்டங்கள் நடந்து வருகின்றன.
அமைச்சர்கள் பேச்சுவார்த்தை
மேலும் இவ்விரண்டு சங்கங்களும் ஜனவரி 6 முதல் மாநிலம் முழுவதும் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் அறிவித்தன. இதையடுத்து கடந்த டிசம்பர் 22 அன்று தலைமைச் செயலகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்க நிர்வாகிகளுடன் அமைச்சர்கள் எ.வ. வேலு, தங்கம் தென்னரசு, அன்பில் மகேஸ் பொய்யமொழி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அதில் சுமூக முடிவு எட்டப்படவில்லை.
இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம்
இதற்கிடையில் இதேபோன்ற கொள்கைகளை வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்களும் போராட்டம் நடத்தி வருகிறார்கள். சென்னை நுங்கம்பாக்கம் டிபிஐ வளாகம், மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், எழிலகம், வட்டார கல்வி அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் முற்றுகைப் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். தொடர்ந்து தொடர்ந்து எட்டாவது நாளாக இன்றும் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு போராட்டம் நடத்தினர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களைக் காவல்துறையினர் குண்டுக்கட்டாக கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
நாளை முக்கிய முடிவு
இதனிடையே இன்று தலைமைச் செயலகத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஜாக்டோ ஜியோ சங்கங்களின் நிர்வாகிகளுடன் அமைச்சர்கள் மீண்டும் ஆலோசனை நடத்தினர். கூட்டம் நிறைவடைந்த பிறகு ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர் வெங்கடேசன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அவர் கூறியதாவது:-
“ஆலோசனைக் கூட்டத்தில் எங்கள் தரப்பு விளக்கங்களை அமைச்சர்களிடம் எடுத்துக் கூறியிருக்கிறோம். நாளை முதலமைச்சர் வெளியிடவிருக்கும் அறிவிப்பின் அடிப்படையில் ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் கூடி எங்களது அடுத்தகட்ட நடவடிக்கைகளை அறிவிப்போம். பணியிலிருந்து ஓய்வுபெற்ற 48,000 ஊழியர்களுக்கு நல்ல செய்தியை முதலமைச்சர் வழங்குவார் என்று எதிர்பார்க்கிறோம். முதலமைச்சர் பழைய ஓய்வூதிய திட்டத்தை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கிறோம். அது வெளியான பிறகு ஜனவரி 6 அன்று அறிவிக்கப்பட்டிருந்த வேலை நிறுத்தப் போராட்டம் பற்றி முடிவெடுக்கப்படும். எங்களது மற்ற கோரிக்கைகள் பற்றியும் பேசியிருக்கிறோம். அதற்கும் சேர்த்து முதலமைச்சர் அறிவிப்பு வெளியிட்டால் மகிழ்ச்சி அடைவோம்” என்றார்.
The government employees' association has said that the Chief Minister will make an important announcement on December 3 regarding the old pension scheme in Tamil Nadu.