

தமிழ்நாடு சட்டப்பேரவையில் 144 ஆதரவு வாக்குகளைப் பெற்று விஜயின் தமிழக வெற்றிக் கழக அரசு பெரும்பான்மையை அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் 144 இடங்களைப் பெற்று விஜய் பெரும்பான்மையை நிரூபித்தார்.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் 108 இடங்களில் வென்று பெரும்பான்மை கட்சியாக உருவான விஜயின் தமிழக வெற்றிக் கழகம் காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக மற்றும் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று சட்டப்பேரவையில் கொண்டு வரப்பட்டது.
சட்டப்பேரவை தொடங்கியதும் நம்பிக்கை கோரும் தீர்மானத்தை முதலமைச்சர் விஜய் முன்மொழிந்தார். அதன்பின் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ் குமார், தான் சார்ந்த கட்சியின் ஆதரவைத் தெரிவித்தார். தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட், அமமுகவிலிருந்து நீக்கப்பட்டுள்ள மன்னார்குடி எம்.எல்.ஏ எஸ். காமராஜ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகியோர் தங்கள் ஆதவரைப் பதிவு செய்தனர்.
அதன்பின் பேசிய தேமுதிக சட்டமன்ற உறுப்பினர் பிரேமலதா விஜயகாந்த், திமுக சார்பில் தேர்தலில் போட்டியிட்ட மனிதநேய ஜனநாயகக் கட்சியின் தமிமுன் அன்சாரி, மனிதநேய மக்கள் கட்சியின் ஜவாஹிருல்லா, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எதிர்ப்பு தெரிவிப்பதாகக் கூறினர். அப்போது அதிமுகவில் பிளவு ஏற்பட்டு தனி அணியாகச் செயல்படும் எஸ்.பி. வேலுமணி தரப்பு சட்டமன்ற உறுப்பினர்கள், தவெகவுக்கு ஆதரவு தருவதாகத் தெரிவித்தனர். அதைக் குறிப்பிட்டு எஸ்.பி. வேலுமணி பேசியபோது எடப்பாடி பழனிசாமி தரப்பினர் கூச்சல் போட்டதால் சட்டப்பேரவையில் சலசலப்பு ஏற்பட்டது.
பாட்டாளி மக்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணியும், பாஜக சட்டமன்ற உறுப்பினர் போஜராஜனும் நடுநிலை வகிப்பதாகத் தெரிவித்தனர்.
அதன்பின் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விஜயின் அரசு மீது அடுக்கடுக்கான குற்றங்களைச் சுமத்தினார். மேலும், நம்பிக்கை வாக்கெடுப்பில் திமுக பங்கேற்கவில்லை என்று கூறி சட்டப்பேரவையிலிருந்து திமுக உறுப்பினர்களுடன் வெளிநடப்பு செய்தார். அதன்பின் எண் கணக்கு முறையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் தவெக மற்றும் கூட்டணிக் கட்சிகளின் உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்து வாக்களித்தனர். அப்போது பாஜக, பாமக உறுப்பினர்கள் நடுநிலையாக வாக்களித்தனர். அதிமுகவில் எஸ்.பி. வேலுமணி தரப்பு உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்தனர். எடப்பாடி பழனிசாமி தரப்பு உறுப்பினர்கள் எதிராக வாக்களித்தனர்.
வாக்கெடுப்பிற்குப் பின் முடிவுகளைச் சபாநாயகர் ஜே.சி.டி. பிராபகர் அறிவித்தார். அதன்படி, தமிழக வெற்றிக் கழகத்திற்கு 144 வாக்குகள் கிடைத்தன. எதிராக 22 வாக்குகளும், நடுநிலையாக 5 வாக்குகளும் கிடைத்தன. தமிழ்நாடு சட்டப்பேரவையில், பெரும்பான்மையை நிரூபிக்க 116 இடங்கள் தேவை என்ற நிலையில், 144 வாக்குகளைப் பெற்று தமிழக வெற்றிக் கழக அரசு பெரும்பான்மையை நிரூபித்தது.
அதன்பின் முதலமைச்சர் விஜய் நன்றி தெரிவித்ததைத் தொடர்ந்து சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது.
Tamil Nadu: CM Vijay led TVK govt passes floor test in Assembly with 144 votes in favour