தமிழ்நாட்டு ரயில் திட்டங்களுக்கு போதுமான நிதி ஒதுக்க வேண்டும்: ஸ்டாலின்

திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீட்டை குறைத்திருப்பது, தமிழ்நாட்டுக்கு அத்தியாவசியமான இரட்டைப் பாதை திட்டங்களைச் செயல்படுத்துவதை நிச்சயம் தாமதப்படுத்தும்
தமிழ்நாட்டு ரயில் திட்டங்களுக்கு போதுமான நிதி ஒதுக்க வேண்டும்: ஸ்டாலின்
1 min read

தமிழ்நாட்டில் புதிய வழித்தடங்கள், இரட்டைப் பாதை மற்றும் வாடிக்கையாளர்களுக்கான வசதிகள் தொடர்பான திட்டங்களுக்கு போதுமான அளவுக்கு நிதி ஒதுக்கப்படுவதை உறுதி செய்யுமாறு மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவுக்குக் கடிதம் எழுதியுள்ளார் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்.

கடிதத்தில் ஸ்டாலின் எழுதியுள்ளவை பின்வருமாறு:

`2024-2025 நிதியாண்டுக்கான வழக்கமான பட்ஜெட்டில் தெற்கு இரயில்வே திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் நிதி ஏமாற்றமளிக்கிறது, அதே ஆண்டின் இடைக்கால பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட ஒதுக்கீடுகளுடன் ஒப்பிடும்போது இது மிகக் குறைவு.

புதிய பாதைகளுக்கு இடைக்கால ஒதுக்கீடாக 976.1 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், வழக்கமான பட்ஜெட் ஒதுக்கீட்டில் வெறும் 301.3 கோடி ரூபாய்தான் ஒதுக்கப்பட்டிருக்கிறது. இரட்டைப் பாதையாக்கலுக்கு இடைக்கால ஒதுக்கீடாக 2,214.4 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், வழக்கமான பட்ஜெட் ஒதுக்கீட்டில் 1,928.8 கோடி ரூபாய்தான் ஒதுக்கப்பட்டிருக்கிறது.

புதிய வழித்தடத் திட்டங்களுக்கான ஒதுக்கீட்டில் அதிரடிக் குறைப்பு செய்யப்பட்டுள்ளதால், தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் பல முக்கியத் திட்டங்களின் முன்னேற்றம் கடுமையாக பாதிக்கப்படும். அதேபோல், இரட்டைப் பாதைத் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீட்டை குறைத்திருப்பது, தமிழ்நாட்டில் மிகவும் அத்தியாவசியமாக உள்ள இரட்டைப் பாதை திட்டங்களைச் செயல்படுத்துவதை நிச்சயம் தாமதப்படுத்தும்.

எனவே மேற்கூறியவற்றைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாட்டில் புதிய வழித்தடங்கள், இருவழிப்பாதை மற்றும் வாடிக்கையாளர்களுக்கான வசதிகள் தொடர்பான திட்டங்களுக்கு போதுமான அளவிற்கு நிதி ஒதுக்கப்படுவதை உறுதி செய்திட வேண்டும். நிதிப் பற்றாக்குறை காரணமாக தமிழகத்தின் முக்கியத் திட்டங்கள் மேலும் தாமதப்படக்கூடாது’.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in