
முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு ஏற்பட்ட தலைச்சுற்றலுக்கான காரணம் குறித்தும், ஆஞ்சியோ பரிசோதனை குறித்தும் அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது.
கடந்த ஜூலை 21 அன்று காலையில் எப்போதும்போல வழக்கமாக நடைபயிற்சி மேற்கொண்டபோது, முதல்வர் ஸ்டாலினுக்கு லேசான தலைச்சுற்றல் ஏற்பட்டுள்ளது. இருந்தாலும், அதை அவர் சமாளித்ததாக கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து, அன்று காலை அண்ணா அறிவாலயத்தில், அதிமுக முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா திமுகவில் இணையும் நிகழ்வில் அவர் கலந்துகொண்டார். எனினும், தொடர்ந்து தலைச்சுற்றல் இருந்ததால் கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் முதல்வர் அனுமதிக்கப்பட்டார்.
இதைத் தொடர்ந்து, 3 நாள்களுக்கு ஓய்வெடுக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருந்தது. இதற்கு மறுநாள் (ஜூலை 22), தேனாம்பேட்டையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் முதல்வருக்குப் பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது.
மருத்துவமனையில் இருந்தபடி `உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் தொடர்பாக முதல்வர் மேற்கொண்ட ஆய்வு குறித்த காணொளி நேற்று (ஜூலை 24) வெளியானது.
இந்நிலையில், இன்று (ஜூலை 24) காலை முதல்வரை சந்தித்து நலம் விசாரித்த மூத்த அமைச்சர் துரைமுருகன், `ஆஞ்சியோ பரிசோதனைக்குப் பிறகு முதல்வர் நலமுடன் இருக்கிறார்’ செய்தியாளர்களிடம் தகவல் தெரிவித்தார்.
அதன்பிறகு முதல்வரின் உடல்நிலை குறித்து அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் இன்று (ஜூலை 24) வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது,
`தலைச்சுற்றல் ஏற்பட்டதை அடுத்து முதல்வர் ஸ்டாலினுக்கு பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதயத்துடிப்பு சீரற்ற நிலையில் இருந்ததால், முதல்வருக்கு தலைசுற்றல் ஏற்பட்டது தெரியவந்தது. மருத்துவர் செங்கோட்டுவேலு தலைமையிலான குழு அளித்த ஆலோசனையின்படி இன்று (ஜூலை 24) காலை முதல்வருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
ஆஞ்சியோ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் அனைத்தும் இயல்பான நிலையில் இருப்பது தெரியவந்தது. முதல்வர் நலமுடன் இருக்கிறார், தனது வழக்கமான பணிகளை இன்னும் இரண்டு நாள்களில் மேற்கொள்வார்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.