தமிழகத்துக்கான முதலீடுகளை ஈர்க்கும்விதமாக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (ஆகஸ்ட் 27) அமெரிக்கா செல்கிறார். இந்தப் பயணத்தில் அமெரிக்காவில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார் ஸ்டாலின்.
2021-ல் தமிழக முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றதும், 2030-க்குள் தமிழ்நாட்டை ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக உயர்த்த இலக்கு நிர்ணயித்தது தமிழக அரசு. இலக்கை அடையும் முயற்சியாக, முதலீடுகளை ஈர்க்க 2022-ல் துபாய், 2023-ல் சிங்கப்பூர், ஜப்பான், 2024 பிப்ரவரியில் ஸ்பெயின் ஆகிய நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டார் ஸ்டாலின்.
இதில் அடுத்த கட்டமாக தமிழகத்துக்கான முதலீடுகளை ஈர்க்க இன்று இரவு சென்னையில் இருந்து அமெரிக்க புறப்பட்டுச் செல்கிறார் முதல்வர். அமெரிக்காவில் 17 நாட்கள் தங்கியிருந்துவிட்டு செப்டம்பர் 12-ல் தமிழ்நாட்டுக்குத் திரும்புகிறார் ஸ்டாலின்.
சென்னையில் இருந்து கிளம்பி நாளை (ஆகஸ்ட் 28) அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகருக்குச் செல்கிறார் ஸ்டாலின். அங்கே நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் அவர் பங்கேற்கிறார். ஆகஸ்ட் 31-ல் சான்பிரான்சிஸ்கோ வாழ் புலம்பெயர்ந்த தமிழர்களைச் சந்தித்து உரையாடுகிறார்.
பிறகு செப்டம்பர் 2-ல் அமெரிக்காவின் சிகாகோ நகருக்குப் பயணம் மேற்கொள்கிறார் ஸ்டாலின். செப்டம்பர் 12 வரை சிகாகோவில் தங்கியிருந்து ஃபார்ச்சூன் 500 பட்டியலில் உள்ள முன்னணி நிறுவனங்களின் தலைவர்களை அவர் சந்தித்துப் பேசுகிறார். இதற்கிடையே செப்டம்பர் 7-ல் சிகாகோ வாழ் அயலக தமிழர்களுடன் சந்திப்பு மேற்கொள்கிறார்.
செப்டம்பர் 12-ல் சிகாகோவிலிருந்து கிளம்பி சென்னை திரும்புகிறார் ஸ்டாலின். முதல்வரின் இந்தப் பயணத்தில் தமிழக தொழில், வர்த்தகத்துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜாவும் உடனிருப்பார் என்று தகவல் வெளியாகியுள்ளது.