
தமிழ்நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 1000 முதல்வர் மருந்தகங்களை வரும் பிப்.24-ல் முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைக்கவுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
ஜெனரிக் உள்ளிட்ட அனைத்து மருந்துப் பொருட்களும் தமிழக மக்களுக்குக் குறைந்த விலையில் கிடைக்கும் வகையில், முதல்வர் மருந்தகம் என்கிற புதிய திட்டத்தை செயல்படுத்தவிருப்பதாகவும், முதற்கட்டமாக தமிழகத்தில் 1000 முதல்வர் மருந்தகங்கள் திறக்கப்படும் என்றும் கடந்தாண்டு சுதந்திர தின விழா உரையில் குறிப்பிட்டார் முதல்வர் ஸ்டாலின்.
இதைத் தொடர்ந்து, பி. பார்ம் அல்லது டி. பார்ம் சான்று பெற்றவர்கள் அல்லது அவர்களின் ஒப்புதலுடன் முதல்வர் மருந்தகம் அமைக்க விரும்புபவர்கள் தமிழக கூட்டுறவுத்துறையால் இயக்கப்படும் mudhalvarmarunthagam.tn.gov.in என்கிற இணையத்தளத்தின் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து 2 ஆயிரத்திற்கும் அதிகமான விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றதாகவும், தகுதி மற்றும் முன்னுரிமை அடிப்படையில் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படும் எனவும் தமிழக அரசு சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், வரும் பிப்.24-ல் தமிழ்நாடு முழுவதும் 1,000 முதல்வர் மருந்தகங்களை முதல்வர் ஸ்டாலின் திறந்துவைக்கவுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. சென்னையில் மட்டும் 33 இடங்களில் முதல்வர் மருந்தகங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
முதல்வர் மருந்தகம் அமைக்கும் தொழில் முனைவோருக்கு அரசு மானியமாக ரூ. 3 லட்சம் வழங்கப்படுகிறது. மருத்தகத்திற்கு தேவையான ஜெனரிக் மருந்துகள் தமிழ்நாடு மருத்துவ சேவை கழகத்தால் கொள்முதல் செய்யப்பட்டு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.