அரசு முறைப் பயணமாக கடந்த 2 வாரங்களாக அமெரிக்காவில் இருந்த தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று சிகாகோ விமான நிலைத்திலிருந்து சென்னைக்குக் கிளம்பினார்.
தமிழகத்துக்கு தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் கடந்த ஆகஸ்ட் 27-ல் அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார் முதல்வர் ஸ்டாலின். அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ, சிகாகோ நகரங்களில் தொழில் முதலீட்டாளர்களைச் சந்தித்து அவர் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதில் அமெரிக்காவின் 18 முன்னணி நிறுவனங்கள் ரூ. 7,616 கோடி அளவுக்கு தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகள் செயவதற்கு ஏதுவாக முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஓப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. மேலும் கூகுள், மைக்ரோசாஃப்ட் போன்ற நிறுவனங்களின் உயர் அலுவலர்களைச் சந்தித்து தமிழகத்தில் தொழில் முதலீடுகளை மேற்கொள்ளவும் முதல்வர் ஸ்டாலின் அழைப்பு விடுத்தார்.
இத்துடன் ஃபோர்டு மோட்டர்ஸ் நிறுவன அதிகாரிகளைச் சந்தித்து சென்னைக்கு அருகே மறைமலை நகரில் முன்பு இருந்த அதன் மூடப்பட்ட உற்பத்தி ஆலையை மீண்டும் திறப்பது குறித்து ஆலோசனை மேற்கொண்டார் ஸ்டாலின்.
இந்நிலையில் அமெரிக்க பயணத்தை முடித்துக் கொண்டு, சென்னை புறப்படுவதற்கு ஏதுவாக இந்திய நேரப்படி இன்று காலை 8 மணி அளவில் சிகாகோ விமான நிலையத்துக்குச் சென்றார் முதல்வர் ஸ்டாலின். விமான நிலையத்தில் அமெரிக்க வாழ் தமிழர்கள் அவரை வழியனுப்பி வைத்தனர். இதைத் தொடர்ந்து நாளை (செப்.14) காலை 8 மணி அளவில் சென்னை விமான நிலையத்தை வந்தடைகிறார் ஸ்டாலின்.