
தமிழக அரசின் பொங்கல் பரிசுத்தொகுப்பு விநியோகத்தைச் சென்னையில் தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்.
நடப்பாண்டின் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழகத்தின் 2.20 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுநீளக் கரும்பு அடங்கிய பொங்கல் பரிசு வழங்கப்படும் என தமிழக அரசு சமீபத்தில் அறிவித்தது.
இதைத் தொடர்ந்து, அரசின் பொங்கல் பரிசுத்தொகுப்பைப் பெறுவதற்கு ஏதுவாகக் கடந்த ஜனவரி 3-ம் தேதி தொடங்கி பொதுமக்களுக்கு டோக்கன்கள் வழங்கப்பட்டன. இந்நிலையில், சென்னை சைதாப்பேட்டையில் பொங்கல் பரிசுத்தொகுப்பு விநியோகத்தைத் தொடங்கி வைத்தார் தமிழக முதல்வர் ஸ்டாலின்.
ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழுநீளக் கரும்பு, வேட்டி, சேலை அடங்கிய பொங்கல் பரிசுத்தொகுப்பை பயனாளிகளுக்கு வழங்கினார் முதல்வர் ஸ்டாலின். இந்த நிகழ்வில், தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன், உணவுத்துறை அமைச்சர் அர. சக்கரபாணி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இன்று தொடங்கி அடுத்த சில நாட்களுக்குத் தமிழகம் முழுவதுமுள்ள ரேஷன் கடைகளில் பொது மக்களுக்குப் பொங்கல் பரிசு விநியோகிக்கப்படும் எனத் தெரிகிறது. 2.21 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க ரூ. 249.75 கோடி ஒதுக்கியுள்ளது தமிழக அரசு.