தமிழகத்தில் ஆன்லைன் வழியாக கட்டுமானங்களுக்கு அனுமதி வழங்கும் திட்டம் தொடக்கம்

`2,500 சதுர அடி வரை கட்டப்படும் குடியிருப்புக் கட்டுமானத்துக்கு கட்டிட அனுமதி தேவையில்லை. பணி முடிவு சான்று பெறத் தேவையில்லை’ என்று அறிவிக்கப்பட்டது.
தமிழகத்தில் ஆன்லைன் வழியாக கட்டுமானங்களுக்கு அனுமதி வழங்கும் திட்டம் தொடக்கம்
1 min read

தமிழ்நாட்டில் முதல்முறையாக ஆன்லைனில் கட்டிட அனுமதி பெறும் திட்டத்தை இன்று (ஜூலை 22) தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க. ஸ்டாலின்.

கடந்த வருடம் அக்டோபர் 2 முதல் கிராம ஊராட்சிகளில் கட்டிட அனுமதிக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் நடைமுறை தமிழக அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது. இதை அடுத்து கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்ட தமிழக பட்ஜெட்டில் ‘2,500 சதுர அடி வரை கட்டப்படும் குடியிருப்பு கட்டுமானத்துக்கு கட்டிட அனுமதி தேவையில்லை. பணி முடிவு சான்று பெறத் தேவையில்லை’ என்று அறிவிக்கப்பட்டது.

இந்த அறிவிப்பை நடைமுறைப்படுத்தும் விதமாக சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்த அரசு விழாவில், `2,500 சதுர அடி வரையுள்ள மனையிடத்தில் 3,500 சதுர அடி வரையுள்ள குடியிருப்புக் கட்டடம் கட்ட சுய சான்றிதழின் அடிப்படையில் உடனடி கட்டட அனுமதி வழங்கும் திட்டத்தை’ தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்.

இந்தத் திட்டத்தின் கீழ் அனுமதி பெற, www.onlineppa.tn.gov.in என்ற இணையதளத்தில் பொது மக்கள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் அளிக்கும் விவரங்களின் அடிப்படையில் கட்டட அனுமதி உடனடியாக வழங்கப்படும். இது குறித்து சம்பந்தப்பட்ட எந்த அரசு அலுவலகத்துக்கும் விண்ணப்பதாரர்கள் செல்ல வேண்டியது இல்லை.

மேலும், கட்டிடத்தின் கட்டுமானப் பணிகள் முடிந்த பிறகு, முடிவு சான்று பெறுவதில் இருந்தும் விண்ணப்பதாரர்களுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது. பரிசீலனை கட்டணம், கட்டமைப்பு, வசதிக் கட்டணங்களில் ஆகியவற்றில் இருந்து விண்ணப்பதாரர்களுக்கு 100 சதவீதம் விலக்கு அளிக்கப்படுகிறது.

இந்த விழாவில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் கட்டப்பட்டுள்ள 4184 புதிய அடுக்குமாடி குடியிருப்புகளையும், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் சார்பில் கட்டப்பட்டுள்ள 1459 தமிழ்நாடு அரசு ஊழியர்கள் வாடகை குடியிருப்புகள் மற்றும் வணிக வளாகங்களையும் முதல்வர் ஸ்டாலின் காணொளி வாயிலாக திறந்து வைத்தார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in