
`கல்வராயன் மலைப்பகுதிக்கு சென்று மக்களின் நிலை பற்றி முதலமைச்சர் ஆய்வு செய்ய வேண்டும்’ என்று கருத்து தெரிவித்துள்ளார் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியன்.
சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் தமிழ்மணி, ஒரு யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், `விஷச்சாராயத்தால் பாதிக்கப்பட்டுள்ள கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கல்வராயன் மலைப்பகுதியும் உள்ளடக்கம். இந்த மலைப்பகுதி இன்னும் முன்னேறாமல் இருக்கிறது. கடந்த 20 வருடங்களாக இது குறித்த தகவலை நான் வெளியிட்டு வருகிறேன்’ என்றார்.
இந்தக் காணொளியைப் பார்த்த உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம் சுப்பிரமணியன், கல்வராயன் மலைப்பகுதி மக்கள் மேம்பாடு குறித்த வழக்கை தாமாக முன்வந்து எடுத்துக் கொண்டு, கடந்த ஒரு மாதமாக நீதிபது குமரப்பனுடன் இணைந்து விசாரணை மேற்கொண்டார்.
கடந்த முறை நடந்த விசாரணையில், `கடந்த 1991-ல் தான் இந்த மக்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டுள்ளது. சுதந்திரமடைந்த பிறகும் கூட இந்த மக்களின் நலன் மீது அக்கறை செலுத்தப்படவில்லை. அங்கே எந்தவிதமான அடிப்படை வசதிகளும் இல்லை. இது தொடர்பாக தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்’ என்றார் நீதிபதி சுப்பிரமணியன்.
இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பான விசாரணையின் போது அறிக்கை தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம் கேட்டார் தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் பி.எஸ். ராமன்.
அப்போது, `மீண்டும் ஏன் அவகாசம் கேட்கிறீர்கள்? அந்தப் பகுதிக்கு நீங்கள் நேரில் சென்று பார்வையிட்டீர்களா? முதல்வர் அல்லது அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சம்மந்தப்பட்ட துறையின் அமைச்சருடன் சென்று நேரில் அந்த இடத்தைப் பார்வையிட வேண்டும். அப்போதுதான் அரசு அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுப்பார்கள்’ என்று கருத்து தெரிவித்தார் நீதிபதி எஸ்.எம் சுப்பிரமணியன்.
மேலும், `கல்வராயன் மலைப்பகுதி மக்களுக்கு சாலை வசதி, ரேஷன் கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை விரைந்து ஏற்படுத்த வேண்டும்’ என்று உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தது சென்னை உயர் நீதிமன்றம்.