கூட்ட நெரிசல் விபத்துகளைத் தவிர்ப்பதில் நாட்டுக்கே தமிழகம் வழிகாட்டும்: முதல்வர் ஸ்டாலின் | MK Stalin |

அனைவரோடும் கலந்தாலோசித்து 'நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை வடிவமைப்போம் என்றும் உறுதி...
கோப்புப்படம்
கோப்புப்படம்ANI
2 min read

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து சென்னை உயர் நீதிமன்றம் கூறியுள்ள வழிகாட்டுதல்கள் அனைத்தையும் அரசு தீவிரமாகச் செயலாற்றி வருவதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கரூரில் கடந்த செப்டம்பர் 27 அன்று நடந்த தவெக பரப்புரை கூட்டத்தின்போது கூட்ட நெரிசல் காரணமாக 41 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து தவெக பொதுச்செயலாளர் ஆனந்த், இணைப் பொதுச்செயலாளர் நிர்மல்குமார், தேர்தல் பரப்புரை மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

மேலும், கரூர் மாவட்ட தவெக நிர்வாகிகள் மதியழகன், பவுன்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள். இதற்கிடையில் நேற்று (அக்.3) கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான பல வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்திலும், மதுரை கிளையிலும் விசாரணைக்கு வந்தன.

அதில், சென்னை உயர் நீதிமன்றத்தில் வந்த பொதுநல மனுவை விசாரித்த நீதிபதி செந்தில்குமார், விஜய் மற்றும் தவெகவைக் கடுமையாக விமர்சித்தார். தவெகவின் பரப்புரை வாகனத்தைப் பறிமுதல் செய்ய வேண்டும். விஜய் மீது ஏன் வழக்குப் போடவில்லை? ஆதவ் அர்ஜுனா மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல உத்தரவுகளைப் பிறப்பித்தார். மேலும், இந்த விவகாரம் குறித்து விசாரிக்க வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்தும் உத்தரவிட்டார். அதன்படி அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டு, விசாரணை தொடங்கப்படவுள்ளது. அதேபோல் உயர் நீதிமன்ற மதுரை கிளையும் பல்வேறு உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது.

இந்நிலையில், உயர் நீதிமன்றத்தின் உத்தரவுகள் குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் சமூக ஊடகப் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,

”கரூர் துயரம் குறித்து மாண்பமை உயர்நீதிமன்றம் கூறியுள்ள கருத்துகள், வழிகாட்டுதல்கள் அனைத்தையும் தமிழ்நாடு அரசு மிகத் தீவிரமாக கவனத்தில் கொண்டு செயலாற்றி வருகிறது.

கரூரில் நடந்த துயரத்தால் நாம் அனைவருமே நெஞ்சம் கலங்கிப் போயிருக்கிறோம். தம் அன்புக்குரியோரை இழந்து தவிக்கும் ஒவ்வொரு குடும்பத்தின் கண்ணீரையும் கண்டு தவிக்கிறேன்.

மாண்பமை உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் அமைக்கப்பட்டுள்ள சிறப்புப் புலனாய்வுக் குழு (SIT) தனது விசாரணையைத் தொடங்கும். இதன் மூலம், முழு உண்மையையும் வெளிக்கொண்டு வருவோம் என்று மாநிலத்தின் முதலமைச்சராக மக்களுக்கு நான் உறுதியளிக்கிறேன். அனைத்து மட்டங்களிலும் பொறுப்பு உறுதிசெய்யப்படும்.

பலவற்றிலும் இந்தியாவுக்கே முன்னோடியான தமிழ்நாடு, கூட்ட நெரிசல் விபத்துகளைத் தவிர்ப்பதிலும் நாட்டுக்கு வழிகாட்டும். மாநிலம் முழுவதும் துறைசார் வல்லுநர்கள், அரசியல் கட்சியினர், செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள் என அனைவரோடும் கலந்தாலோசித்து ஒரு முழுமையான 'நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை (SOP) வடிவமைப்போம். தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவும் பின்பற்றத்தக்க மாடலாக இது அமையும்.

துடைக்க முடியாத இந்தத் துயரச் சம்பவத்தின் பின்னணியில் அரசியல் நோக்கோடு ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டாமல் ஒரு நீண்டகாலத் தீர்வை நோக்கிப் பயணிப்போம். இந்தக் கூட்டு முயற்சியில் அனைவரது யோசனைகள், ஆலோசனைகளையும் வரவேற்கிறேன். ஒவ்வொரு உயிரும் விலைமதிப்பில்லாதது. நம் மக்களின் இன்னுயிரைக் காக்கவும், இனி இப்படி ஒரு பெருந்துயரம் தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியாவில் எங்குமே நிகழாமல் தடுக்கவும் ஒன்றிணைவோம்!”

என்று கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in