சட்டப்பேரவையில் ஆளுநரின் செயல் மக்களாட்சிக்கு எதிரான சவால்: முதலமைச்சர் ஸ்டாலின் | MK Stalin |

தேசபக்தி குறித்து யாரும் எங்களுக்குப் பாடம் எடுக்க வேண்டிய நிலையில் இல்லை...
சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உரை
சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உரை
2 min read

சட்டப்பேரவையில் தன் உரையைப் படிக்காமல் ஆளுநர் வெளியேறியது மக்களாட்சிக்கு எதிரான சவாலாகக் கருதப்பட வேண்டியுள்ளது என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.

2026-க்கான தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜனவரி 20 அன்று கூடியது. அன்றைய தினம் ஆளுநர் உரையை வாசிக்காமல் புறக்கணித்துச் சென்றார். இது சர்ச்சையானது. அதன் அவை நடவடிக்கைகள் தொடர்ந்த நிலையில், சட்டப்பேரவையின் இறுதி நாளான இன்று ஆளுநரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்பின் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது பதிலுரையை வழங்கினார். அப்போது அவர் கூறியதாவது:-

மக்களாட்சிக்கு எதிரான சவால்

”தமிழ்நாட்டின் நலனுக்காக செயல்பட வேண்டிய ஆளுநர், தமிழக மக்களுக்காகப் பாடுபடும் எங்களுக்கு எதிராகத் தொடர்ந்து செயல்படுவது மிகுந்த வேதனையை அளிக்கிறது. ஆளுநர் தாம் படிக்க வேண்டிய உரையைப் படிக்காமல் செல்வது வேடிக்கையாக உள்ளது. இதன்மூலம், அவர் வகிக்கும் பதவியையே அவர் அவமானப்படுத்துகிறார். பொறுப்புமிக்க பதவியில் இருந்து கொண்டு அதை கேவலப்படுத்துகிறார். கடந்த மூன்றாண்டுகளாக நமது ஆளுநர் ஒரே காரணத்தைத் திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டு, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு தயாரித்துக் கொடுத்த உரையைப் படிக்காமல் வெளியேறுவது என்பது மக்களாட்சிக்கு விடப்பட்ட சவாலாகவே இந்த பேரவை கருத வேண்டி உள்ளது.

தேசபக்தியை யாரும் சொல்லித்தர வேண்டாம்

கோடிக்கணக்கான மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களது விருப்பங்களுக்கு ஏற்ப செயல்படக்கூடிய அரசு இது. ஆளுநர் உரை தொடங்கும்போது தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவதும், முடிவடையும்போது நாட்டுப்பண் பாடுவதும் தமிழ்நாடு சட்டப்பேரவையின் மரபு. முதலிலேயே நாட்டுப்பண் பாடவில்லை என்பதைத் திரும்பத் திரும்பக் குற்றச்சாட்டாக அவர் கூறி வருகிறார். இந்த நாட்டின் மீதும், நாட்டுப்பண் மீதும் அளவற்ற பெருமதிப்பையும் மரியாதையும் கொண்டுள்ளவர்கள் நாம். தேசிய ஒருமைப்பாட்டிலும் நாட்டுப் பற்றிலும் யாருக்கும் குறைந்தவர்கள் அல்ல நாங்கள் என்பதை ஆளுநருக்கு அழுத்தமாகவும் திருத்தமாகவும் நான் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். யாரும் எங்களுக்கு தேசபக்தி குறித்து பாடம் எடுக்கும் நிலையில் இல்லை. தேசபக்தி பாடம் நடத்தக்கூடிய அளவிற்கு இந்தத் தேசத்திற்காகப் போராடியவர்களும் அவர்கள் இல்லை. இன்றைய காலகட்டதில் யார் தேச விரோதிகள் என்பது மக்களுக்கே தெரியும்.

ஆளுநருக்கு விளக்கம் அளிக்கும் நிலையில் உள்ளேன்

ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்குப் பதிலளிக்க வேண்டிய நான், இன்று ஆளுநருக்கு விளக்கம் அளித்துப் பேச வேண்டிய நிலையில் இருக்கிறேன். அண்ணா, கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் இருந்த ஆளுநர்கள் கூட இப்படிச் செயல்படவில்லை. பல முரண்பாடுகள் இதயத்தில் இருந்தாலும், அதை ரணமாக்கும் வகையில் செயல்படவில்லை. அந்த அளவுக்கு அதிகமான சோதனைகளை எதிர்கொண்டவனாக நான் இன்று நின்று கொண்டிருக்கிறேன்” என்றார்.

Summary

Chief Minister M.K. Stalin said that the Governor's exit from the Assembly without reading his speech should be considered a challenge against democracy.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in