
பிரதமர் மோடி தலைமையிலான நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதற்கும் வகையில் முதல்வர் ஸ்டாலின் தலைநகர் தில்லிக்கு சென்றுள்ளார்.
நிதி ஆயோக் அமைப்பின் 9-வது நிர்வாக குழு கூட்டம், தலைநகர் தில்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நாளை (மே 23) நடைபெறுகிறது. ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள முன்னதாக அனைத்து மாநிலங்கள் மற்றும் மூன்று யூனியன் பிரதேசங்களின் முதல்வர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
இதை ஒட்டி, நேற்றைக்கு முந்தைய தினம் (மே 21) தன் எக்ஸ் கணக்கில் பதிவிட்ட முதல்வர் ஸ்டாலின், `தமிழகத்துக்கான நியாயமான நிதி உரிமையை நிதி ஆயோக் கூட்டத்தில் வெளிப்படுத்த தில்லி செல்கிறேன். கொண்ட கொள்கையில் உறுதியாக நிற்பேன். தமிழகத்திற்கான நிதியை போராடிப் பெறுவேன்’ என்று அறிவித்தார்.
இதைத் தொடர்ந்து, இன்று காலை 9.30 மணியளவில் சென்னையில் இருந்த புறப்பட்ட ஸ்டாலின், மதியம் 1 மணியளவில் தில்லியைச் சென்றடைந்தார். இன்று மாலை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை மரியாதை நிமித்தமாக அவர் சந்திப்பார் என்று தகவல் தெரிவிக்கப்படுகிறது.
நிதி ஆயோக் கூட்டத்தில் கல்வி நிதி, பேரிடர் நிவாரண நிதி போன்ற நிலுவையில் உள்ள நிதிகளை தமிழகத்திற்கு விடுவிக்க முதல்வர் கோரிக்கை விடுப்பார் என்று கூறப்படுகிறது. முந்தைய ஆண்டுகளில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் பங்கேற்காத நிலையில், தற்போது பங்கேற்பதால் இந்த பயணம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.