

தமிழ்நாட்டில் திமுக ஆட்சி செய்வதால் கோவைக்கு மெட்ரோ ரயில் நிராகரிக்கப்பட்டது என்பதற்கு எடப்பாடி பழனிசாமியும் வானதி சீனிவாசனும் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துவிட்டார்கள் என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.
ஈரோடு மாவட்டத்தில் நடந்த அரசு விழாவில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நலத்திட்ட பணிகளைத் தொடங்கிவைத்தார். பின்னர் நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-
“தன்னை மேற்கு மண்டலத்தவர் என்று சொல்லிக்கொள்ளும் எதிர்க்கட்சி தலைவர் பழனிச்சாமி, இந்த மண்டலத்துக்கு இது போன்ற செயல்களை செய்தாரா என்று நான் கேட்க விரும்புகிறேன். அவர் செய்ததெல்லாம் வெறும் துரோகம்தான். பச்சைத் துண்டைப் போட்டுக்கொண்டு தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு பழனிசாமி பச்சை துரோகம் செய்தார் என்று நான் சொன்னதும் அவருக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்தது. நான் ஒரு விவசாயி, இப்போதும் விவசாயம் செய்கிறேன் என்கிறார் பழனிசாமி. ஆனால் அவர் ஒரு துரோகி, இப்போதும் தொடர்ந்து துரோகத்தைச் செய்து கொண்டிருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். அவரை விவசாயி என்று சொல்வது உண்மையான உழவர் பெருமக்களை அவமானப்படுத்துவதற்குச் சமமாகவிடும்.
நெல் கொள்முதலில் ஈரப்பதம் தளர்வு தொடர்பான தமிழ்நாட்டின் கோரிக்கையை மத்திய பாஜக அரசு நிராகரித்துவிட்டார்கள். பழனிசாமி உண்மையான விவசாயியாக இருந்திருந்தால் என்ன செய்திருக்க வேண்டும்? தமிழ்நாட்டின் கோரிக்கையை பிரதமர் மோடி ஏற்க வேண்டும் என்று சொல்லியிருக்க வேண்டும் அல்லவா. தில்லியில் பல கார்களில் மாறி மாறிச் சென்று யார் யாரையோ சந்திக்கிறீர்களே, தமிழ்நாட்டு விவசாயிகளுக்காக கோரிக்கை வைக்க பிரதமரைச் சந்திக்கிறேன் என்று சொல்லுங்கள். நீங்கள் சொன்னால் போதும் தமிழ்நாடு அரசு சார்பில் நானே உங்களுக்கு வேர்க்காத அளவுக்கு நல்ல காரை ஏற்பாடு செய்து அனுப்பி வைக்கிறேன்.
எடப்பாடி பழனிசாமி பச்சை துரோக பட்டியலில் சமீபத்திய சேர்ப்பு, கோவை மெட்ரோ. அது பெரிய துரோகம். சென்னையைப் போல் கோவை, மதுரையின் வருங்கால வளர்ச்சிக்கு மெட்ரோ தேவை என்று நாம் கோரிக்கை வைத்தோம். ஆனால் மத்திய பாஜக அரசு அதையும் நிராகரித்துவிட்டது. 2011 மக்கள் தொகையைக் கணக்கில் வைத்து நிராகரித்துவிட்டார்கள். இப்போது 2022-ல் மக்கள் தொகை கணக்கெடுப்பை எடுத்தால் 20 லட்சத்திற்கும் அதிகமாகவே இருக்கும். சொல்லப்போனால் அந்தத் திட்டத்திற்கு நிதி ஒதுக்கி நிறைவேற்றி முடிக்கும்போது 2035 ஆகியிருக்கும். வட மாநிலங்களில் 20 லட்சத்திற்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட நகரங்களில் எல்லாம் மெட்ரோ திட்டத்திற்கு ஒப்புதல் கொடுக்கிறார்கள். தமிழ்நாட்டுக்கு மட்டும் கம்பி கட்டும் கதையையெல்லாம் சொல்கிறார்கள்.
பாஜகவுக்கு வாக்களித்த தமிழ்நாட்டிற்கு எதைக் கேட்டாலும் தரக்கூடாது என்ற முடிவுடன் பாஜக இருக்கிறது. அதிமுக ஆட்சிக்கு வந்தால் கோவைக்கு மெட்ரோ கொண்டு வருவோம் என்று பழனிசாமி சொல்கிறார். அதையே கோவை சட்டமன்ற உறுப்பினரும் சொல்லியிருக்கிறார். இதன்மூலம் திமுக ஆட்சியில் இருக்கும் ஒரே காரணத்திற்காத்தான் கோவை, மதுரை மக்களை பாஜக பழிவாங்குகிறது என்று ஒப்புதல் வாக்கு மூலம் கொடுத்திருக்கிறார்கள்.” என்றார்.
Chief Minister Stalin said that Edappadi Palaniswami and Vanathi Srinivasan have confessed that the metro rail project for Coimbatore was rejected because the DMK was in power in Tamil Nadu.