
திருவள்ளுவர் உருவப் படத்திற்கு மரியாதை செலுத்திய முதல்வர் ஸ்டாலின், அய்யன் திருவள்ளுவர் உள்ளிட்ட தமிழ்நாடு அரசின் திருவள்ளுவர் தின விருதுகளை இன்று (ஜன.15) வழங்கினார்.
திருவள்ளுவர் தினத்தை ஒட்டி, சென்னை காமராஜர் சாலையில் உள்ள திருவள்ளுவர் சிலைக்குக் கீழே வைக்கப்பட்டிருந்த உருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின். இதைத் தொடர்ந்து தலைமைச் செயலகத்தில் வைத்து தமிழக அரசு விருதுகளை அவர் வழங்கினார்.
முதலில் அய்யன் திருவள்ளுவர் விருதை, செந்தமிழ்ச் செம்மல் பெரும் புலவர் மு. படிக்கராமுவுக்கு வழங்கினார் முதல்வர் ஸ்டாலின். பேரறிஞர் அண்ணா விருது, இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கேற்றவரும், முன்னாள் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றியவருமான எல். கணேசனுக்கு அறிவிக்கப்பட்டிருந்தது. அவருக்குப் பதில், அந்த விருதை அவரது மகன் அண்ணா பெற்றுக்கொண்டார்.
தந்தை பெரியார் விருது விடுதலை இராஜேந்திரனுக்கும், அண்ணல் அம்பேத்கர் விருது நாடாளுமன்ற உறுப்பினர் து. ரவிக்குமாருக்கும், பெருந்தலைவர் காமராஜர் விருது முன்னாள் மத்திய அமைச்சர் கே.வி. தங்கபாலுவுக்கும், மகாகவி பாரதியார் விருது கவிஞர் கபிலனுக்கும், பாவேந்தர் பாரதிதாசன் விருது கவிதைப் பேரொளி பொன். செல்வகணபதிக்கும் வழங்கப்பட்டது.
இதனை அடுத்து திரு.வி.க. விருது மருத்துவர் ஜி.ஆர். இரவீந்திரநாத்துக்கும், கி.ஆ.பெ. விசுவநாதம் விருது வே.மு. பொதியவெற்பனுக்கும், முத்தமிழறிஞர் கலைஞர் விருது முத்து வாவாசிக்கும் வழங்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, இளையராஜா இசையில் உருவான திருக்குறள் திரைப்படத்தின் முதல் பாடலை வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின்.