
தேர்தல் முடியும் வரை ஓய்வு என்பதை மறந்து விடுங்கள் என்று திமுக மாவட்ட செயலாளர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழக 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், திமுக மாவட்ட செயலாளர்களுடன் முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று (செப். 9) ஆலோசனை மேற்கொண்டார். காணொலிக் காட்சி வாயிலாக நடைபெற்ற ஆலோசனைக் கூடத்தில் அவர் கூறியதாவது :
“திமுக ஆட்சியில் தமிழ்நாட்டின் வளர்ச்சியை மீட்டெடுத்து 11.19% வளர்ச்சியோடு இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக உயர்த்தியிருக்கிறோம். இதன் அடுத்தகட்ட பாய்ச்சலாகவே நான் ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து பயணம் மேற்கொண்டேன். பயணம் தொடங்குவதற்கு முன் நான் சொன்னதைப் போலவே ரூ. 15,516 கோடிக்கான முதலீடுகள் ஈர்க்கப்பட்டு, இப்பயணம் சூப்பர் ஹிட் அடித்துள்ளது. தமிழ்நாட்டை ஒரு ட்ரில்லியன் பொருளாதாரமாக உயர்த்த வேண்டும் என்றால், 2026 தேர்தலில் திமுக மாபெரும் வெற்றியைப் பெற வேண்டும்.
வரும் செப்டம்பர் 17 -ல் நடைபெறவுள்ள திமுக முப்பெரும் விழாவில் தங்கள் அனைவரும் சந்திக்க ஆவலாக உள்ளேன். அதற்கு முன் பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளான செப்டம்பர் 15 அன்று 68 ஆயிரம் வாக்குச்சாவடிகளிலும் அந்தந்த வாக்குச்சாவடிகளில் இணைந்த குடும்பங்களை அழைத்து கூட்டங்களை நடத்த வேண்டும். அப்போது பேரறிஞர் அண்ணா பிறந்தநாளில் மண், மொழி, மானம் காக்க தமிழ்நாடெங்கும் 68 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் நாம் நடத்தும் கூட்டங்களில் உறுதிமொழி எடுப்போம்.
முப்பெரும் விழா முடிந்த பிறகு, செப்டம்பர் 20-ல் ஓரணியில் தமிழ்நாடு கூட்டங்களை மாவட்ட வாரியாக நடத்த வேண்டும். அரசின் திட்டங்களால் மக்களுக்கு திமுக மீது இருக்கும் ஆதரவு உணர்வை தேர்தல் வரை எடுத்துச் சென்று அறுவடை செய்ய வேண்டும். அதற்காக ஒவ்வொருவரும் களத்தில் தீவிரமாக பணியாற்ற வேண்டும். உங்களை நான் கேட்டுக் கொள்வதெல்லாம் தேர்தல் நாள் வரைக்கும் பசி - தூக்கம் - ஓய்வை மறந்து, உழைப்பை கொடுங்கள். 2026-லும் நாமே உதிப்போம்.” இவ்வாறு அவர் பேசினார்.
DMK | MK Stalin | DMK District executives | TN Politics | TN Elections 2026 |