அம்மா உணவகத்தில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு
கோப்புப்படம்

அம்மா உணவகத்தில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு

உணவகத்துக்கு வந்த வாடிக்கையாளர்களிடம் அங்கு வழங்கப்படும் உணவின் தரம், அளவு, சுவை குறித்துக் கேட்டறிந்தார் முதல்வர் ஸ்டாலின்
Published on

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அம்மா உணவகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார் முதல்வர் ஸ்டாலின்.

இன்று (ஜூலை 19) காலை சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்த அரசு நிகழ்ச்சிகளை முடித்த பிறகு தனது முகாம் அலுவலகத்துக்குக் கிளம்பினார் முதல்வர் ஸ்டாலின். அப்போது வழியில் இருந்த தேனாம்பேட்டை அம்மா உணவகத்தில் திடீரென ஆய்வு மேற்கொண்டார்.

தேனாம்பேட்டை அம்மா உணவகத்துக்குச் சென்ற முதல்வர் ஸ்டாலின் அங்கு வைக்கப்பட்டிருந்த வாடிக்கையாளர்களின் வருகைப்பதிவேட்டை ஆய்வு செய்தார். அதன் பிறகு அங்கு பணியாற்றும் ஊழியர்களிடம் உணவுக்கான ஏற்பாடுகள் குறித்து கேள்வி எழுப்பினார். மேலும் உணவருந்த வந்த வாடிக்கையாளர்களிடம் அங்கு வழங்கப்படும் உணவின் தரம், அளவு, சுவை குறித்துக் கேட்டறிந்தார்.

சென்னையில் உள்ள அம்மா உணவகங்களில் வழங்கப்படும் உணவுகளின் தரம் குறைந்துவிட்டதாகவும், உணவகங்கள் சரியாகப் பராமரிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டுகள் தொடர்ந்து எழுப்பப்பட்டு வந்தன. இதைத் தொடர்ந்து நடந்து முடிந்த சென்னை மாமன்றக் கூட்டத்தில் ரூ. 5 கோடி சென்னையில் உள்ள அம்மா உணவகங்களின் மேம்பாட்டுக்காக ஒதுக்கப்பட்டது.

சென்னையில் உள்ள 200 வார்டுகளில், வார்டுக்கு தலா 2 அம்மா உணவகங்கள் உள்ளன, மேலும் ராஜீவ் காந்தி பொது மருத்துவமனை, கலைஞர் பன்நோக்கு மருத்துவமனை போன்ற அரசு மருத்துவமனைகளில் 7 அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன.

முதல்வரின் இந்த ஆய்வின் போது சென்னை மாநகராட்சி ஆணையராக புதிதாகப் பொறுப்பேற்றுள்ள ஜெ. குமரகுருபரன் ஐஏஎஸ் உடனிருந்தார்.

logo
Kizhakku News
kizhakkunews.in