
மொழிப்போர் தியாகிகள் நடராசன், தாளமுத்து ஆகியோரின் புதுப்பிக்கப்பட்ட நினைவிடத்தை திறந்து வைத்து மரியாதை செலுத்திய முதல்வர் மு.க. ஸ்டாலின், அவர்களுக்கு திருவுருவச் சிலை நிறுவப்படும் என்று அறிவித்தார்.
இந்தி எதிர்ப்பு மொழிப் போராட்டத்தில் சிறை சென்று உயிர் நீத்த தாளமுத்து, நடராசன் ஆகியோரின் தியாகத்தைப் போற்றும் வகையில் தமிழ்மொழித் தியாகிகள் நினைவு நாளான இன்று (ஜனவரி 25) மொழிப்போராட்ட தியாகிகள் நடராசன், தாளமுத்து ஆகியோரின் புதுப்பிக்கப்பட்ட நினைவிடத்தினை சென்னை மூலக்கொத்தளத்தில் திறந்து வைத்தார் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்.
இதனைத் தொடர்ந்து, நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அவர் மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்வில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், தமிழக அமைச்சர்கள், சென்னை மேயர், சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டார்கள்.
இது தொடர்பாக தன் எக்ஸ் சமூக வலைதளக் கணக்கில் முதல்வர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளதாவது,
`ஆதிக்க இந்திக்குத் தமிழ்நாடு அடிபணியாது என்பதை உணர்த்திய மொழிப்போர்க்களத்தின் முதல் தியாகச் சுடர்கள் நடராசன் - தாளமுத்து ஆகியோரின் புதுப்பிக்கப்பட்ட நினைவிடத்தை மூலக்கொத்தளத்தில் திறந்து வைத்தேன்.
அதுமட்டுமல்ல, சகோதரர் திருமாவளவனின் கோரிக்கையினை ஏற்று, எழும்பூரில் உள்ள தாளமுத்து - நடராசன் மாளிகையில் அவர்களின் திருவுருவச் சிலைகள் நிறுவப்படும்! தமிழைக் காக்கத் தம்மையே பலியிட்ட தீரர்களின் தியாகத்தால் இயக்கப்படும் அரசு இது! மொழிப்போர்த் தியாகிகளுக்கு எம் வீரவணக்கம்! தமிழ் வெல்லும்!’ என்றார்.