
தூத்துக்குடியில் மினி டைடல் பூங்காவை திறந்து வைக்கும் முதல்வர் ஸ்டாலின், அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்த மாணவிகளுக்கு பயனளிக்கும் வகையில் புதுமைப் பெண் திட்டத்தை விரிவாக்கம் செய்து வைக்கிறார்.
கோவை மாவட்டம் விளாங்குறிச்சியில் அமைக்கப்பட்ட தகவல் தொழில்நுட்பப் பூங்காவையும், திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராமில் அமைக்கப்பட்ட டைடல் பூங்காவையும் சமீபத்தில் திறந்துவைத்தார் முதல்வர் ஸ்டாலின்.
இதன் தொடர்ச்சியாக, நாளை (டிச.29) 63 ஆயிரம் சதுர அடி பரப்பளவில், 4 தளங்களுடன் கட்டப்பட்டுள்ள மினி டைடல் பூங்காவை தூத்துக்குடியில் திறந்து வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின். ரூ. 32 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள இந்த மினி டைடல் பூங்காவில் வாகன நிறுத்துமிடம், உணவுக்கூடம், உடற்பயிற்சிக்கூடம், கலையரங்கம் ஆகிய வசதிகள் உள்ளன.
முன்பு விழுப்புரம், சேலம், தஞ்சாவூர் மாவட்டங்களில் மினி டைடல் பூங்காக்களை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின். திருப்பூர், வேலூர், காரைக்குடியில் மினி டைடல் பூங்காக்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
மேலும், அரசுப் பள்ளிகளில் படித்த கல்லூரி மாணவிகளுக்குப் பயனளிக்கும் வகையில் ரூ. 1,000 உதவித் தொகை வழங்கும் புதுமைப் பெண் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்திவருகிறது. தூத்துக்குடியில் வைத்து அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்த மாணவிகளுக்கு பயனளிக்கும் வகையில் புதுமைப் பெண் திட்டத்தை வரும் டிச.30-ல் விரிவாக்கம் செய்து வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.