
தமிழ்நாட்டில் முதற்கட்டமாக 1000 முதல்வர் மருந்தகங்களை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்.
`பொதுப் பெயர் (ஜெனரிக்) மருந்துகளையும், பிற மருந்துகளையும் குறைந்த விலையில் தமிழ்நாட்டு மக்களுக்குக் கிடைக்கச் செய்யும் வகையில், முதல்வர் மருந்தகம் என்ற புதிய திட்டத்தை இந்த அரசு செயல்படுத்தும்’ என்று கடந்தாண்டு சென்னையில் நடைபெற்ற 78-வது சுதந்திர தின விழாவில் அறிவித்தார் முதல்வர் மு.க. ஸ்டாலின்.
இதைத் தொடர்ந்து, முதல்வர் மருந்தகம் அமைக்க விருப்பமுள்ள B-Pharm/D-Pharm சான்று பெற்றவர்கள் அல்லது அவர்களின் ஒப்புதலோடு மருந்தகம் அமைக்க விருப்பம் உள்ளவர்கள் தமிழக கூட்டுறவுத்துறை மூலம் www.mudhalvarmarunthagam.tn.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று கடந்தாண்டு நவம்பரில் தமிழக அரசு அறிவித்தது.
இணைய வாயிலாகப் பெறப்பட்ட விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, அதன் அடிப்படையில் மாநிலம் முழுவதும் தமிழக கூட்டுறவுத்துறை சார்பில் 1000 மருந்துகங்கள் அமைக்கப்பட்டன. சந்தை விலையை விட 75% தள்ளுபடி விலையில் இங்கு மருந்துகள் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் இன்று (பிப்.24) நடைபெற்ற அரசு விழாவில் இந்த 1000 முதல்வர் மருந்தகங்களை திறந்து வைத்தார் தமிழக முதல்வர் ஸ்டாலின். இதைத் தொடர்ந்து இந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது,
`கல்வியும், மருத்துவமும் நம் திராவிட மாடல் அரசின் இரு கண்களாக விளங்குகிறது. சிறந்த மருத்துவக் கட்டமைப்பை உருவாக்கி, அனைவருக்கும் தரமான மருத்துவம் கிடைப்பதை உறுதி செய்ய, பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
அதன் தொடர்ச்சியாக, கடந்த ஆகஸ்ட் 15-ல் முதல்வர் மருந்தகம் தொடர்பாக நான் வெளியிட்ட அறிவிப்பு, இன்று செயல்பாட்டிற்கு வருவது மகிழ்ச்சியை அளிக்கிறது. தங்களுக்கான மருந்துகளை பொதுமக்கள் அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலையை மாற்றும் வகையிலும், அவர்களின் சுமையை குறைக்கும் வகையிலும் இந்த முதல்வர் மருந்தகங்களை திறக்க நாங்கள் திட்டமிட்டோம்.
அறிவித்தபடி 1000 மருந்தகங்கள் இன்று திறக்கப்பட்டுள்ளன. இந்த மருந்தகங்களை சிறப்பாகச் செயல்படுத்த மருந்தாளர்களுக்கும், கூட்டுறவு அமைப்புகளுக்கும் மானியம் மற்றும் தேவையான உதவிகளை அரசு வழங்கியது’ என்றார்.