
தூத்துக்குடியில் அமைக்கப்பட்டுள்ள வின்ஃபாஸ்ட் மின்சார கார் உற்பத்தி ஆலையை திறந்து வைத்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், ஆலையில் தயாரிக்கப்பட்ட முதல் காரில் கையெழுத்திட்டு விற்பனையைத் தொடங்கி வைத்தார்.
வியட்நாம் நாட்டைச் சேர்ந்த வின்ஃபாஸ்ட் நிறுவனம் ரூ. 1,119 கோடி முதலீட்டில் ஆண்டுக்கு ரூ. 16 ஆயிரம் கோடி மதிப்பில் சுமார் 1.5 லட்சம் வாகனங்களை உற்பத்தி செய்யும் மின்சார கார் தயாரிப்பு ஆலையை தூத்துக்குடியில் நிறுவுவதற்கு தமிழ்நாடு அரசுடன் ஒப்பந்தம் மேற்கொண்டது.
இதன் அடிப்படையில் அமைக்கப்படவிருந்த புதிய ஆலைக்கு கடந்தாண்டு முதல்வர் மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். புதிய உற்பத்தி ஆலையின் பணிகள் நிறைவுற்ற நிலையில், தூத்துக்குடியில் இன்று (ஆக. 4) காலை நடைபெற்ற விழாவில் ஆலையை முதல்வர் திறந்து வைத்தார்.
இந்த ஆலையில் வி.எஃப்-6 மற்றும் வி.எஃப்-7 ரக கார்கள் உற்பத்தி செய்யப்பட்டு, விற்பனைக்குத் தயாராக உள்ளன. மேலும், இந்த ஆலையில் தயாரிக்கப்பட்ட முதல் காரில் கையெழுத்திட்டு விற்பனையை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இந்த விழாவில் ஸ்டாலின் பேசியதாவது,
`இந்தியாவின் மொத்த மின் வாகன உற்பத்தியில் 40% தமிழ்நாட்டில் இருந்துதான் உற்பத்தியாகிறது. தமிழ்நாடுதான் இந்தியாவின் வாகன உற்பத்தி மற்றும் மின் வாகன உற்பத்தியின் தலைநகர் என்று நெஞ்சை நிமிர்த்தி நான் கூறுவேன்.
சென்னைதான் இந்தியாவின் டெட்ராய்ட். ஸ்ரீபெரும்புதூரில் எப்படி முதல் கார் உற்பத்தி திட்டம் தொடங்கப்பட்டதோ, அதேபோல் இன்று தூத்துக்குடியில் முதல் மின் வாகன உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது’ என்றார்.
இதைத் தொடர்ந்து, தூத்துக்குடியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தொழில் முதலீடு மாநாடு தொடங்கியது. இதில் சுமார் 50,000 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் ரூ. 32,554 கோடி மதிப்பிலான 41 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.