இன்று (செப்.26) மாலை 5 மணி அளவில் சென்னை விமான நிலையத்தில் இருந்து ஒரு நாள் பயணமாக தில்லி புறப்பட்டார் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்.
இன்று இரவு தில்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் தங்கும் முதல்வர் ஸ்டாலின், நாளை (செப்.27) காலை பிரதமர் மோடியை சந்தித்து தமிழகத்துக்கான நிதி நிலுவைகள் குறித்த கோரிக்கை மனுவை அவரிடம் அளிக்கிறார்.
நடப்பு நிதியாண்டுக்கான அனைவருக்கும் கல்வி இயக்கம் திட்டத்தின் கீழ் தமிழகத்துக்குச் சேர வேண்டும் முதல் தவணை நிதியை நிறுத்தி வைத்துள்ளது மத்திய அரசு. மேலும் சென்னை மெட்ரோ ரயில் 2-ம் கட்ட திட்டத்துக்கான மத்திய அரசின் பங்கான ரூ. 7,425 கோடி நிதியும் இதுவரை விடுவிக்கப்படவில்லை.
தமிழகத்துக்குச் சேரவேண்டிய நிதியை ஒதுக்குமாறு தமிழக அமைச்சர்கள் மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் அமெரிக்க பயணத்தை முடித்துக்கொண்டு கடந்த செப்.14-ல் சென்னை திரும்பிய தமிழக முதல்வர் ஸ்டாலின், `தமிழகத்துக்குச் சேர வேண்டிய நிதி தொடர்பாக பிரதமர் மோடியை சந்தித்து வலியுறுத்துவேன்’ என்றார்.
இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் இருந்து இன்று மாலை தில்லிக்கு புறப்பட்டு சென்றார் முதல்வர் ஸ்டாலின். இதை அடுத்து நாளை காலை பிரதமர் மோடியை சந்தித்து தமிழகத்துக்குச் சேர வேண்டிய நிதி தொடர்பான கோரிக்கை மனுவை அவரிடம் அளிக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.
இதன்பிறகு நாளை இரவு 8 மணிக்கு முதல்வர் ஸ்டாலின் சென்னைக்குத் திரும்புகிறார்.