கோவை மற்றும் மதுரைக்கு மெட்ரோ ரயில் சேவைக்கான திட்ட அறிக்கைகளை மீண்டும் பரிசீலித்து இத்திட்டங்களை நடைமுறைப்படுத்த உத்தரவிட வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
கோவை மற்றும் மதுரை மாநகரங்களுக்கு மெட்ரோ ரயில் சேவை வழங்க முடியது என்று மத்திய அரசு மறுத்துள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் கடந்த நவம்பர் 19 அன்று பதிவிட்டு குற்றம் சாட்டியிருந்தார். இந்நிலையில், இந்த இரு நகரங்களில் மெட்ரோ ரயில் சேவைக்கான விரிவான திட்ட அறிக்கைகளை மீண்டும் பரிசீலனை செய்து, நடைமுறைப்படுத்த தகுந்த அறிவுரைகளைச் சம்பந்தப்பட்ட துறைக்கு வழங்கிடக் கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-
“கோவை மற்றும் மதுரை மாநகரங்களுக்கு மெட்ரோ ரயில் அமைப்புகளுக்கான திட்டங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதற்குத் எனது ஏமாற்றத்தையும், வேதனையையும் தெரிவித்துக் கொள்கிறேன். வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகத்தின் இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும். அதிக அளவிலான தனிநபர் வாகனங்களைக் கொண்டும், நாட்டிலேயே மிகவும் நகரமயமாக்கப்பட்ட மாநிலமாகவும் தமிழ்நாடு விளங்கி வரும் நிலையில், அனைத்து வகையிலும் பெரிய அளவிலான வளர்ச்சிக்கு வித்திடும் வகையில் பெரும்நகரங்களில், அதிக திறன் கொண்ட பொது போக்குவரத்து மாற்றுகள் தேவைப்படுகிறது. இதற்காக, கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரயில்களுக்கான விரிவான திட்ட அறிக்கைகளை தயாரித்து, மத்திய அரசின் ஒப்புதலுக்காக அனுப்பியிருந்தோம். இந்நிலையில், தகுதியின் அடிப்படையில் மற்ற மாநிலங்களில் அனுமதிக்கப்பட்ட இதேபோன்ற திட்டங்களுடன் ஒப்பிடும்போது, கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களை நிராகரித்திருப்பது, அந்த இரண்டு பெருநகரங்களில் வாழும் மக்களிடையே ஆழ்ந்த அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
மேற்குறிப்பிட்டுள்ள இரண்டு திட்டங்களின் உயர் முன்னுரிமையைக் கருத்தில் கொண்டு, தொடர்புடைய அமைச்சகத்தைத் தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளோம். கடந்த 24.5.2025 மற்றும் 26.7.2025 ஆகிய நாள்களில் பிரதமரை நேரில் சந்தித்து, தமிழ்நாட்டின் முன்னுரிமை கோரிக்கைகள் அடங்கிய குறிப்பாணையைச் சமர்ப்பித்து, இத்திட்டங்கள் குறித்து, நான் பிரதமரிடம் தனிப்பட்ட முறையில் வலியுறுத்திதையும் நினைவு கூரவேண்டும். மற்ற மாநிலங்களில் இதுபோன்ற திட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சகம் மெட்ரோ ரயில் திட்டம் குறித்த தமிழ்நாட்டின் கோரிக்கையை நிராகரித்தது எங்களுக்கு பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு, இரண்டு மாநகரங்களில் வசிக்கும் மக்களிடையே மிகுந்த அதிருப்தியை உருவாக்கியுள்ளது.
மத்திய அரசின் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறையால் மேற்கோள் காட்டப்பட்டுள்ள காரணங்கள் பொருத்தமற்றவை என்றும், மெட்ரோ ரயில் கொள்கை 2017-ல் குறிப்பிடப்பட்டுள்ளதைப் போன்று, 20 லட்சம் மக்கள் தொகை என்ற அளவுகோல் இதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று. கோவை உள்ளூர் திட்டப் பகுதியின்படி அதன் மக்கள் தொகை 2011 லேயே 20 லட்சத்தைத் தாண்டியிருந்தது. மதுரையிலும் எதிர்பார்க்கப்படும் மக்கள் தொகையை விட அதிகமாக இருக்கிறது. இந்த 20 லட்சம் என்ற அளவுகோல் ஒரேமாதிரியாகக் கருத்தில் கொள்ளப்பட்டிருந்தால், ஆக்ரா, இந்தூர் மற்றும் பாட்னா போன்ற இரண்டாம் நிலை நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டம் நிறைவேறியிருக்க வாய்ப்பில்லை. இந்த அளவுகோலை கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்டப் பணிகளுக்குச் சுட்டிக்காட்டுவது என்பது, எங்களது இந்த நகரங்களுக்கு எதிரான மத்திய அரசின் பாகுபாட்டு நிலையையே காட்டுகிறது. எனவே மத்திய அரசு மற்ற மாநிலங்களில் மேலே குறிப்பிடப்பட்ட நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டத்தைச் செயல்படுத்திட மேற்கொண்ட முடிவினைப் போன்று, தமிழ்நாட்டிலுள்ள இந்த மாநகரங்களிலும் செயல்படுத்திட ஏதுவாக இந்த அளவுகோலை நீக்க வேண்டும்.
மேலும், கோவை நகரில் இந்தத் திட்டத்திற்கான பயணிகளின் அடர்வு எண்ணிக்கை, சென்னையில் உள்ள பயணிகளின் அடர்வு எண்ணிக்கையுடன் ஒப்பிட்டுத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. பயணிகளின் எண்ணிக்கை என்பது பல காரணிகளைச் சார்ந்திருப்பதால் இது பொருத்தமானதல்ல. இந்த இரண்டு நகரங்களும் சென்னையிலிருந்து வேறுபட்ட பயண முறைகளைக் கொண்டுள்ளன. விரிவான போக்குவரத்து ஆய்வுகளுக்குப் பிறகு ஆர்ஐடிஇஎஸ் தயாரித்த கோவைக்கான விரிவான இயக்கத் திட்டம், முன்மொழியப்பட்ட துறைகளில் மெட்ரோ ரயில் பயணத்தின் தேவையைத் தெளிவாகக் கணித்துள்ளது.
மதுரைக்கும், 2011-ம் ஆண்டின் விரிவான இயக்கத் திட்டத்தில், பொதுப் போக்குவரத்து அமைப்பு முன்மொழியப்பட்டது. ஆனால் பெரும்பாலான பாதைகளின் நீளம் உயர்த்தப்பட வேண்டியிருப்பதால், ரயில் போக்குவரத்திற்கான அமைப்பையும் பரிசீலிக்கலாம் என்று அதில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், விரிவான திட்ட அறிக்கை ஆய்வுகள் போக்குவரத்து கணிப்புகளின் அடுத்தடுத்த, தனிப்பட்ட மதிப்பீடுகளைச் செய்துள்ளன, இது மெட்ரோ ரயில் வழித்தடங்களின் தேவையை நியாயப்படுத்தியது. இந்தக் காரணிகள் போதுமான அளவு கருத்தில் கொள்ளப்படவில்லை.
மெட்ரோ ரயில் வழித்தட உரிமையைப் பொறுத்தவரை, இந்தியாவின் பெரும்பாலான நகரங்களில் இத்திட்டங்களுக்குத் தனியார் நிலங்களைக் கையகப்படுத்த வேண்டிய கட்டாயம் இருப்பது அனைவரும் அறிந்த ஒன்று. நிலம் கையகப்படுத்துவதால் சமூகத்தில் ஏற்படும் பாதிப்புகளை, மெட்ரோ ரயில் திட்டங்களின் நீண்டகால சமூக-பொருளாதார நன்மைகளுடன் சமநிலைப்படுத்த வேண்டியதன் அவசியத்தை நாங்கள் முழுமையாக உணர்ந்துள்ளோம். தமிழ்நாட்டில் தற்போதைய திட்டத்தில் நில உரிமையாளர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவு செய்யும் வகையில், இழப்பீட்டை நாங்கள் வழங்கி வருகிறோம். கோவை மற்றும் மதுரை நகரங்களில் முன்மொழியப்பட்ட மெட்ரோ இரயில் திட்டங்களுக்கு நிலம் கிடைப்பது என்பது ஒரு தடையாக இருக்காது என்பதை தமிழ்நாடு அரசு உறுதி செய்யும்.
இந்தச் சூழ்நிலையில், மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சகம் எழுப்பியுள்ள ஐயங்களுக்கு உரிய, விரிவான விளக்கங்களைச் சமர்ப்பிக்க சிறப்பு முயற்சிகள் துறைக்கு நான் அறிவுறுத்தியுள்ளேன். மேலே குறிப்பிடப்பட்டுள்ள கருத்துக்களின் அடிப்படையில், மதுரை மற்றும் கோவை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கான கருத்துருவைத் திருப்பியனுப்பும் முடிவை மறுபரிசீலனை செய்ய சம்பந்தப்பட்ட அமைச்சகத்திற்கு உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். தேவைப்படின் இத்திட்டங்கள் குறித்து விரிவான விளக்கம் அளிக்க குழுவுடன் பிரதமரைச் சந்திக்க தயாராக இருக்கிறேன்.
மேலும், இந்த இரண்டு திட்டங்களும் தமிழ்நாட்டின் தொழில்துறை மற்றும் கலாசார மையத்தை உள்ளடக்கியது என்பதைக் கருத்தில் கொண்டு, தனிப்பட்ட முறையில் இந்த விவகாரத்தில் பிரதமர் தலையிட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
Chief Minister Stalin has written a letter to Prime Minister Modi requesting him to re-examine the project reports for the metro rail service for Coimbatore and Madurai and order them to be implemented.