பாரிஸ் பாராலிம்பிக்ஸில் பதக்கம் வென்ற தமிழக வீரர், வீராங்கனைகளுக்கு இன்று (செப்.25) ஊக்கத்தொகை வழங்கினார் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்.
கடந்த செப்.8-ல் நிறைவுபெற்ற பாரிஸ் பாராலிம்பிக்ஸில் 7 தங்கம், 9 வெள்ளி, 13 வெண்கலம் உள்ளிட்ட 29 பதக்கங்களை வென்றனர் இந்திய வீரர்கள், வீராங்கனைகள். இதில் தமிழகத்தைச் சேர்ந்த துளசிமதி முருகேசன் வெள்ளி பதக்கத்தையும், மனிஷா ராமதாஸ், நித்ய ஸ்ரீ, மாரியப்பன் தங்கவேலு ஆகியோர் வெண்கலப் பதக்கங்களையும் வென்றிருந்தனர்.
இந்நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (செப்.25) காலை துளசிமதி முருகேசன், மனிஷா ராமதாஸ், நித்ய ஸ்ரீ, மாரியப்பன் தங்கவேலு ஆகியோர் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினைச் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
இதைத் தொடர்ந்து வெள்ளிப் பதக்கம் வென்ற துளசிமதிக்கு ரூ. 2 கோடியும், வெண்கலப் பதக்கங்களை வென்ற மனிஷா, நித்ய ஸ்ரீ, மாரியப்பன் தங்கவேலு ஆகியோருக்குத் தலா ரூ. 1 கோடி ஊக்கத்தொகையை வழங்கினார் முதல்வர் மு.க. ஸ்டாலின். இந்த நிகழ்வில் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உடனிருந்தார்.
இதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த துளசிமதி முருகேசன் `நான் சிறு வயதிலிருந்து எந்த ஒரு தனியார் பயிற்சி மையத்திலும் பயிற்சி எடுத்ததில்லை. முழுக்க முழுக்க தமிழக அரசு வசதிகள் மற்றும் சலுகைகளால் பயனடைந்து இவ்வளவு தூரம் வந்திருக்கிறேன். விளையாட்டுத்துறைக்கு தமிழக அரசு மிகச் சிறப்பான முறையில் பங்களிப்பைச் செய்து வருகிறது. மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
எங்களைப் பார்த்து இன்னும் நிறைய மாற்றுத்திறனாளிகள் வரவேண்டும். இவ்வளவு தூரம் தமிழக அரசு ஒத்துழைப்பை வழங்குகிறது. முதல்வர் மு.க. ஸ்டாலின், விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தமிழ்நாட்டு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்துக்கு நன்றி’ என்றார்.