தூய்மைப் பணியாளர்களைப் பாராட்டி அவர்களுடன் உணவருந்திய முதல்வர் ஸ்டாலின்!

எங்கள் பணி மக்கள் பணி. எந்த மழை வந்தாலும் சமாளிக்க இந்த அரசு தயாராக உள்ளது, எதிர்மறை விமர்சனங்கள் குறித்து நான் கவலைப்படவில்லை.
தூய்மைப் பணியாளர்களைப் பாராட்டி அவர்களுடன் உணவருந்திய முதல்வர் ஸ்டாலின்!
1 min read

சென்னையில் பெய்த கனமழையின்போது நிவாரணப் பணிகளில் தொய்வின்றி ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளர்களை இன்று (அக்.17) பாராட்டி அவர்களுக்குப் பல்வேறு உதவிகளை வழங்கிய தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், அவர்களுடன் அமர்ந்து உணவருந்தினார்.

கொளத்தூர் சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட வீனஸ் நகர், ரெட்டேரி, பாலாஜி நகர், தணிகாசலம் நகர் உள்ளிட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுவரும் நிவாரணப் பணிகள் குறித்து இன்று காலை அமைச்சர்கள், மேயர் சகிதமாக முதல்வர் ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.

இதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்து முதல்வர் ஸ்டாலின் பேசியவை பின்வருமாறு:

`எந்த மழை வந்தாலும் சமாளிக்க இந்த அரசு தயாராக உள்ளது. எதிர்மறை விமர்சனங்கள் குறித்து நான் கவலைப்படவில்லை. ஏனென்றால் அப்படிப்பட்ட சூழ்நிலை இல்லை. மக்கள் திருப்தியாக இருக்கின்றனர். இது குறித்து மக்கள் அளித்த பேட்டி செய்தித்தாள்களில் வெளிவந்துள்ளன.

சென்னையில் பெரும்பாலான இடங்களில் வெள்ள நீர் வடிந்துவிட்டது. மழைநீர் வடியாத சில இடங்களில் அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. மிகவும் சிறப்பாக, மக்கள் பாராட்டக்கூடிய அளவுக்கு மாநகராட்சிப் பணியாளர்களின் செயல்பாடு இருந்தது. மாநகராட்சி அதிகாரிகள், தூய்மைப் பணியாளர்கள், பிற அரசுத் துறை அதிகாரிகள் அனைவருக்கும் எனது பாராட்டுகளை தெரிவித்துள்ளேன்.

அரசுக்கு தெரிவிக்கப்படும் பாராட்டுகளை தாங்கிக்கொள்ள முடியாதவர்கள் விமர்சனங்களை முன்வைக்கின்றனர். அது குறித்து நாங்கள் கவலைப்படவில்லை. எங்கள் பணி மக்கள் பணி. அவற்றை தொடர்ந்து மேற்கொள்வோம்’ என்றார்.

இதனைத் தொடர்ந்து மழையின்போது நிவாரணப் பணிகளில் தொய்வின்றி ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளர்களுக்கு பாராட்டு தெரிவித்து, அவர்களுடன் அமர்ந்து உணவருந்தினார் முதல்வர் ஸ்டாலின். அதன் பிறகு அவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை அவர் வழங்கினார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in