உண்மையான பக்தர்கள் திமுக அரசைப் பாராட்டுகிறார்கள்: முதலமைச்சர் ஸ்டாலின் | MK Stalin |

அமித் ஷாவா அவதூறு ஷாவா என்று சந்தேகம் வரும் அளவுக்கு உள்துறை அமைச்சர் பேசியிருக்கிறார்...
திண்டுக்கலில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்
திண்டுக்கலில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்
2 min read

அமித் ஷாவா அவதூறு ஷாவா என்று சந்தேகம் ஏற்படும் அளவுக்கு உண்மைக்குப் புறம்பான விஷயங்களை உள்துறை அமைச்சர் பேசிவிட்டுச் சென்றுள்ளார் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விமர்சனம் செய்தார்.

திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு நலத்திட்ட பணிகளைத் தொடங்கி வைக்கும் விழாவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:-

“சமீபத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழ்நாட்டிற்கு வந்தார். அவர் நிகழ்ச்சியில் பேசியது எல்லாம் நீங்கள் கேட்டிருப்பீர்கள். அவர் அமித் ஷாவா? அவதூறு ஷாவா என்று சந்தேகம் வரும் அளவு உண்மைக்குப் புறம்பாகப் பேசியிருக்கிறார். தமிழ்நாட்டில் இந்து சமய நம்பிக்கைகளுக்கும் வழிபாட்டு உரிமைகளுக்கும் முடிவு கட்டும் வகையில் அரசு செயல்படுகிறது என்று அமித் ஷா பேசியிருக்கிறார். இதற்கு என் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பாஜக ஆளும் மாநிலங்களின் சாதனை என்ன?

தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது என்று அவருக்குத் தெரியவில்லை. திமுக அரசு பொறுப்பேற்றதிலிருந்து இதுவரை சுமார் 4000 திருக்கோயில்களுக்குக் குடமுழுக்கு நடத்தியிருக்கிறோம். அவருக்குப் புரியும் மொழியில் சொல்ல வேண்டும் என்றால் கும்பாபிஷேகம் நடத்தியிருக்கிறோம். இப்படி ஒரு சாதனையைப் பாஜக ஆளும் மாநிலங்களில் செய்திருக்கிறீர்களா? கண்டிப்பாக இருக்காது. அதுமட்டுமல்ல, 997 திருக்கோயில்களுக்குச் சொந்தமான ரூ. 7701 கோடி மதிப்பிலான 7,655 ஏக்கர் நிலங்களை மீட்டிருக்கிறோம். இதற்காக உண்மையான பக்தர்கள் நமது அரசைப் பாராட்டுகிறார்கள்.

பக்தர்கள் விரும்பும் திமுக ஆட்சி

தலைமைச் செயலகத்தில் வாரத்தில் இரண்டு நாள் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஏதாவது நலத்திட்டப் பணிகளை நான் தொடங்கி வைத்துக்கொண்டே இருக்கிறேன். நமது ஆட்சியில் அறநிலையத்துறை என்னென்ன சாதனைகளைச் செய்திருக்கிறது என்பதை ஒரு நாள் முழுவதும் விளக்கிப் பேச முடியும். அந்த அளவு பெரிய பட்டியலே இருக்கிறது. அதனால்தான் பக்தர்கள் விரும்பும் ஆட்சியாகவும், ஆன்மிக பெரியவர்கள் விரும்பும் ஆட்சியாகவும் திமுக ஆட்சி இருக்கிறது. நமது ஆட்சி அனைத்து சமயத்தவர்களின் நம்பிக்கைக்கும் மதிப்பளித்து, மத உரிமைகளைக் காப்பாற்றும் ஆட்சியாக திமுக ஆட்சி இருக்கிறது.

தமிழ்நாட்டிற்கு மோடி ஆட்சி வேண்டுமா?

இப்படிப்பட்ட தமிழ்நாட்டில் இந்துக்களின் உரிமைகள் பறிக்கப்படுவதாக துளியும் உண்மையில்லாத குற்றச்சாட்டை உள்துறை அமைச்சர் கூறுவது அவருடைய பதவிக்குக் கண்ணியம் அல்ல. தமிழ்நாட்டிற்கு வந்த உள்துறை அமைச்சர் அவதூறு மட்டும் பரப்பிவிட்டுப் போகவில்லை. நமக்காக மக்களிடம் அவர் கேள்வி கேட்டு நம் வேலையை எளிமையாக்கிவிட்டுச் சென்றிருக்கிறார். தமிழ்நாட்டில் மோடி ஆட்சி அமைய வேண்டுமா? வேண்டாமா என்று மக்களைப் பார்த்து அவரே கேட்கிறார். இதைத்தான் நாங்களும் கேட்கிறோம். 2026 தேர்தலில் தமிழ்நாட்டை நாங்கள் ஆள வேண்டுமா? எங்கோயோ தில்லியில் அமர்ந்துகொண்டு நமக்கு சம்பந்தம் இல்லாதவர்கள் ஆள வேண்டுமா என்று கேட்கிறோம். இது தமிழர்களின் சுயமரியாதைக்கு இடப்பட்டிருக்கும் சவால். அதிமுக கூட்டணிக்கு வாக்களித்தால் பாஜகதான் தமிழ்நாட்டை ஆளும். எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அதற்குத்தான் பாடுபடுகிறார்” என்றார்.

Summary

Chief Minister M.K. Stalin criticized the Home Minister Amit Shah for saying that he had spoken untrue things during his TamilNadu visit

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in