
நிதி விவகாரத்தில் தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு ஓரவஞ்சனை செய்து வருகிறது என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.
தமிழக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பாஜகவுடன் கூட்டணியில் இணைந்துள்ளதால் தமிழ்நாட்டுக்கு விடுவிக்க வேண்டிய நிதியைக் கேட்டுப் பெற்றுத் தர வேண்டும் என்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தியதாகத் தெரிகிறது. இதைத் தொடர்ந்து முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசினார். அவர் கூறியதாவது:-
“ஒவ்வொரு முறையும் ஜிஎஸ்டி குழு கூட்டம் நடக்கும் போதும் நமது நிதித்துறை அமைச்சர், செயலாளர் ஆகியோர நேரடியாகச் சென்று நிதிப்பற்றாக்குறையை வலியுறுத்தி, வற்புறுத்திக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், வேண்டுமென்றே, திட்டமிட்டு எதிர்கட்சியாகத் தமிழ்நாட்டில் திமுக தலைமையில் இருக்கும் இந்த ஆட்சி சோகத்திற்கும் கொடுமைக்கும் ஆளாக வேண்டும் என்ற எண்ணத்தில், மத்திய அரசு ஓரவஞ்சனை செய்து கொண்டிருக்கிறது.
நீங்கள் அக்கறையோடு பேசக்கூடியவர், நீங்களும் குரல் கொடுங்கள் என்றுதான் நிதியமைச்சர் கேட்டிருக்கிறாரே தவிர வேறு எந்த நோக்கத்தோடும் அல்ல. நான் பலமுறை தில்லியில் பிரதமரை சந்திக்கும் போதெல்லாம் இதுகுறித்து விளக்கிச் சொல்லியிருக்கிறேன். மனு கொடுத்திருக்கிறேன். பிரச்னைகள் எல்லாம் சுட்டிக்காட்டியிருக்கிறேன். அது மட்டுமல்ல, சில முதலமைச்சருடைய கூட்டங்களில் இது பற்றி பேசி இருக்கிறேன். எனவே நாடாளுமன்றத்தில் தொடர்ந்து நாங்கள் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறோம். இப்போது புதிதாக அவர்களுடன் கூட்டணியில் இணைந்திருப்பதால் நீங்களும் அதை வலியுறுத்த வேண்டும் என்பதுதான் எங்களுடைய கோரிக்கை” என்றார்.