
சென்னை நந்தம்பாக்கத்தில் இன்று (ஜன.12) காலை நடைபெற்ற `அயலகத் தமிழர் தினம்’ மாநாட்டில், பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின் அயலகத் தமிழர்களுக்கான புதிய திட்டத்தை அறிவித்தார்.
இந்த மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பேசியவை பின்வருமாறு,
`50-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்தும், பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வருகை தந்துள்ள உங்கள் அனைவரையும் பார்க்கும்போது புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின், `எங்கும் பாரடா இப்புவி மக்களைப்’ பாடல் இன்று நினைவுக்கு வருகிறது. என் உள்ளத்தில் தற்போது மகிழ்ச்சி நிறைந்துள்ளது.
நான் முதல்வர் ஆன பிறகு உலகின் எந்தப் பகுதிக்குச் சென்றாலும், தாய் மண்ணில் இருக்கக்கூடிய உணர்வை அயலகத்தில் வாழக்கூடிய தமிழர்கள் எனக்கு ஏற்படுத்தினார்கள். தற்போது அதை நினைத்துப் பார்த்தாலும் நெகிழ்ச்சியாக உள்ளது. என் மீது காட்டப்பட்ட பாச உணர்வை இன்னும் என்னால் மறக்க முடியவில்லை.
அதனால்தான் இந்த ஆண்டு அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை இந்த விழாவின் கருப்பொருளாக எத்திசையும் தமிழனங்கே என்ற தமிழ்தாய் வாழ்த்து வரிகளை தேர்ந்தெடுத்து வைத்திருக்கிறோம். புறப்பொருட்கள் நம்மைப் பிரித்தாலும் தமிழ் மொழி, தமிழினம் என்ற உணர்வில் நாமெல்லாம் உள்ளத்தால் ஒன்றாக இருக்கிறோம்.
நம் தாய்மொழி, நாட்டுப்புறக் கலைகள், தமிழ்ப் பண்இசை ஆகியவற்றை அயலகத்தில் வசிக்கும் தமிழ் மக்களின் அடுத்தடுத்த தலைமுறையினருக்கு நேரடியாக பயிற்றுவிக்க வேண்டும் என்று வெளிநாடுகளில் இருந்து கோரிக்கைகள் வந்த வண்ணம் உள்ளது.
100 ஆசிரியர்கள் மற்றும் தமிழ் கலைஞர்களுக்குப் பயிற்சி கொடுத்து இவர்களை அயலகத் தமிழர்கள் வாழக்கூடிய பகுதிகளுக்கு அனுப்பும் வகையில் ஒரு திட்டம் உருவாக்கப்படும். இந்தப் பயிற்றுநர்கள் அங்குள்ள தமிழ்ச் சங்கங்களுடன் இணைந்து தமிழ் மொழியையும், தமிழ் கலைகளையும் இரண்டு ஆண்டுகளுக்கு நேரடிப் பயிற்சி வகுப்புகள் மூலம் நடத்துவார்கள்.
எதிர்காலத்தில் அயலகத் தமிழர்களுக்காக சிறப்பான திட்டங்களை செயல்படுத்துவோம். அயலகத்தில் குடிமக்களாக வாழும் தமிழர்களும், அயலகத்திற்குச் சென்று உழைக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களும் வளமாக வாழத்தான் அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஓய்வின்றி உழைக்கிறது’ என்றார்.