இதற்கெல்லாம் பதில் வருமா?: கேள்விகளை அடுக்கிய முதல்வர் மு.க. ஸ்டாலின் | MK Stalin |

வாட்சப் பல்கலைக்கழகத்தில் பொய்ப் பிரசாரத்தைத் தொடங்குவீர்களா? என்றும் கேள்வி...
இதற்கெல்லாம் பதில் வருமா?: கேள்விகளை அடுக்கிய முதல்வர் மு.க. ஸ்டாலின் | MK Stalin |
ANI
1 min read

சட்டப்பேரவையில் மத்திய அரசிடம் நிதியமைச்சர் வைத்த கேள்விகளைக் குறிப்பிட்டு முதல்வர் ஸ்டாலின் சரமாரி கேள்விகளை எழுப்பியுள்ளார்.

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் இறுதி நாளான நேற்று (அக்.17) மானிய கோரிக்கைகளின் மீதான விவாதத்தில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பதிலளித்துப் பேசினார். அப்போது மத்திய அரசிடம் பத்து கேள்விகளை எழுப்பினார்.

குறிப்பாக, மாநில அரசுகளுடன் கலந்து ஆலோசிக்காமல் ஜிஎஸ்டி சீர்திருத்தம் ஏன்? புதிய கல்விக் கொள்கை மூலம் இந்தியைத் திணிப்பது மாற்றன்தாய் மனப்பான்மை இல்லையா?உ.பி, குஜராத், மகாராஷ்டிராவுக்கு அளிக்கப்படும் சாலை திட்டங்களை தமிழ்நாட்டிற்கு தராதது ஏன்? புதிய ரயில்வே திட்டங்களுக்கு நிதி ஒதுக்குவதில் தென்னக ரயில்வேவுக்கு மட்டும் ஏன் பாரபட்சம்? மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு அனுமதி தர இவ்வளவு தாமதம் ஏன்? தமிழ்நாடு அரசின் நிதியில் கட்டப்படும் வீடுகளில் பிரதமர் பெயர் எதற்கு 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்திற்கு வழங்க வேண்டிய நிதி ரூ.975 கோடி நிதி எங்கே? ஜல் ஜீவன் திட்டத்தில் தமிழ்நாட்டுக்கு சேர வேண்டிய ரூ. 3,709 கோடி நிதி ஏன் இன்னும் விடுவிக்கப்படவில்லை? நாட்டின் மக்கள் தொகையில் தமிழ்நாடு 6%, ஆனால், 4% மட்டும் நிதிப் பகிர்வு அளிப்பது ஏன் என்பது உள்ளிட்ட கேள்விகளைக் கேட்டார்.

இந்நிலையில், இந்தக் கேள்விகள் குறித்த கருத்துகளைப் பகிர்ந்துள்ள முதல்வர் மு.க. ஸ்டாலின் மேலும் சில கேள்விகளைக் கேட்டுள்ளார். அவரது சமூக ஊடகப் பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-

“நிதியமைச்சர் தங்கம் தென்னரசு மட்டுமல்ல, நாட்டு மக்களின் நெஞ்சங்களிலும் ஏராளமான கேள்விகள் நிரம்பியுள்ளன. அவற்றில் சிலவற்றை நான் கேட்கிறேன்:

  • ஊழல்வாதிகள் பாஜகவின் கூட்டணிக்கு வந்தபின், சலவை இயந்திரத்தில் வெளுப்பது எப்படி?

  • நாட்டின் முக்கியமான திட்டங்களுக்கும், சட்டங்களுக்கும் இந்தியிலும் சமஸ்கிருதத்திலும் மட்டுமே பெயரிடப்படுவது என்ன மாதிரியான ஆணவம்?

  • ஒன்றிய அமைச்சர்களே நம் குழந்தைகளை அறிவியலுக்குப் புறம்பான மூடநம்பிக்கைகளைச் சொல்லி மட்டுப்படுத்துவது ஏன்?

  • எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில், ஆளுநர்களை வைத்துக் குழப்பம் விளைவித்து என்ன சாதிக்கப் போகிறீர்கள்?

  • பாஜகவின் தேர்தல் வெற்றிக்காக, மக்களின் வாக்குகளைப் பறிக்கும் வாக்குத் திருட்டை வாக்களர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் ஆதரிப்பது ஏன்?

  • இரும்பின் தொன்மை குறித்து அறிவியல்பூர்வமாகத் தமிழ்நாடு மெய்ப்பித்த அறிக்கையைக்கூட அங்கீகரிக்க மனம்வராதது ஏன்?

  • கீழடி அறிக்கையைத் தடுக்கக் குட்டிக்கரணங்கள் போடுவது ஏன்?

இதற்கெல்லாம் பதில் வருமா? இல்லை வழக்கம்போல, வாட்சப் பல்கலைக்கழகத்தில் பொய்ப் பிரசாரத்தைத் தொடங்குவீர்களா?” என்று கேட்டுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in