தமிழ்நாட்டு மீனவர்கள் கைது: வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் | MK Stalin |

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 35 மீனவர்களைக் கைது செய்தது இலங்கைக் கடற்படை...
முதல்வர் மு.க. ஸ்டாலின் (கோப்புப்படம்)
முதல்வர் மு.க. ஸ்டாலின் (கோப்புப்படம்)படம் - https://x.com/arivalayam
1 min read

இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

தமிழ்நாட்டில் நாகப்பட்டினம் மற்றும் ராமநாதபுரத்தைச் சேர்ந்த 35 மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் குற்றம்சாட்டி, இலங்கைக் கடற்படை இன்று கைது செய்தது. இதற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க தூதரக நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அவரது கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:-

“நவம்பர் 3 அன்று நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த 31 மீனவர்களையும், அவர்களது மூன்று இயந்திர மீன்பிடிப் படகுகளையும் சிறைபிடித்துள்ள இலங்கைக் கடற்படையினர், அதே நாளில், ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த நான்கு மீனவர்களையும் அவர்களது நாட்டுப் படகுகளையும் சிறைபிடித்துள்ளார்கள் என்பதைத் தங்கள் கவனத்திற்குக் கொண்டு வர விரும்புகிறேன். இதுபோன்ற தொடர் கைது சம்பவங்கள், கடலுடன் பிரிக்க முடியாதபடி இணைந்துள்ள மீனவர்களின் வாழ்க்கையையும் அவர்களது வாழ்வாதாரத்தையும் பாதிக்கிறது. மீனவ சமூகத்தினரிடையே ஆழ்ந்த துயரத்தை ஏற்படுத்தியுள்ள இச்சம்பவங்கள், கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களின் குடும்பங்களுக்கு அச்ச உணர்வையும். பாதுகாப்பற்ற நிலையையும் உருவாக்கியுள்ளது. தற்போதைய நிலவரப்படி 114 மீனவர்களும் 247 படகுகளும் இலங்கை வசம் காவலில் உள்ளது. இலங்கை அரசால் சிறைபிடிக்கப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும். அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவிப்பதற்கு உடனடியாக உரிய தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Summary

CM Stalin addressed to Union Minister of External Affairs Jaishankar to initiate immediate diplomatic efforts with the Sri Lankan Government to secure the release of all the detained fishermen from Tamil Nadu along with their fishing boats.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in