
வளரும் தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப மாணவர்கள் தங்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவுரை வழங்கினார்.
சென்னை கொளத்தூரில் அனிதா அச்சீவர்ஸ் அகாடமி மாணவ மாணவியர்களுக்கு மடிக்கணினி, தையல் இயந்திரங்கள் வழங்கும் நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது :-
“தலைவர் கருணாநிதி கற்றுத் தந்திருக்கக்கூடிய அந்த உழைப்பு, என்னுடைய உடலில் இருக்கிற வரையில், நிச்சயமாக உறுதியாக நான் என்னுடைய கடமையை நிறைவேற்றுவேன். நீங்கள் யாரும் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. என்னவோ தெரியவில்லை, கொளத்தூருக்கு வந்துவிட்டால், இப்படி எல்லாம் பேசத் தோன்றுகிறது எனக்கு. இன்று அனிதா அச்சவர்ஸ் அகாடமியைச் சார்ந்த 126 மாணவ மாணவியருக்கு மடிக்கணினிகளும், 356 பெண்களுக்கு தையல் இயந்திரங்களும் வழங்கி இருக்கிறோம். இங்கு இந்த மாணவ மாணவியர்கள் எல்லாம் இருக்கிறீர்கள். உங்களுக்கு நான் சொல்லிக் கொள்ள விரும்புவது எல்லாம், இந்த அகாடமியில் நீங்கள் பெற்றிருக்கக்கூடிய பயிற்சி ஒரு சிறிய துவக்கம்தான். இந்தப் பயிற்சி உங்களுக்கான வாய்ப்புகளை அடையாளம் காட்டக்கூடியது. ஆனால், அதே பாதையில் இங்கு வெற்றிகரமாக நடைபோட வேண்டுமானால், அதைத் தொடர்ந்து கற்றுக்கொள்ளக்கூடிய ஆர்வம் குறைந்துவிடக் கூடாது.
இன்றைக்கு தகவல் தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறது. மனிதர்களுடைய வேலைச்சுமையை இந்த வளர்ச்சி வெகுவாகக் குறைத்து வருகிறது. அதற்கேற்ப நீங்களும் மேம்படுத்திக் கொண்டே வர வேண்டும். அதுதான் என்னுடைய விருப்பம். இன்றைக்கு இணையம் முழுக்க அறிவுத் தகவல்கள் கொட்டிக் கிடக்கிறது. நல்ல பயனுள்ள தகவல்களைப் பார்த்து, உங்கள் திறமையை மேலும் மேலும் நீங்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும். நிறைய ஆன்லைன் படிப்புகள் இருக்கின்றன. எது உங்களுக்கு உதவியாக இருக்குமோ, அதைத் தேடிப் படிக்க வேண்டிய, பயிற்சி பெற வேண்டிய கடமை உங்களுக்கு எல்லாம் இருக்கிறது. படித்துவிட்டோம், வேலை கிடைத்துவிடும் என்று அலட்சியமாக இருந்துவிடாதீர்கள். அஞ்சல் வழியில் மேற்படிப்பைத் தொடருங்கள். படிப்புதான் உங்களுக்கு கடைசி வரை துணை நிற்கும். அதுதான் உங்கள் வாழ்க்கையில் உறுதுணையாக இருக்கும்.
கல்விக்கு இடையூறு ஏற்படுத்தக்கூடிய, கல்வியினால் பெறப்படும் அறிவைக் கொச்சைப்படுத்த, பலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுடைய எண்ணம், நீங்கள் முன்னேற வேண்டும் என்பது கிடையாது. கவர்ச்சியான சொற்களைச் சொல்லி, பின்னுக்கு இழுத்துவிடக் கூடிய ஒரு சூழ்நிலையை சிலர் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். எனவே, எதிர்காலத்திற்கு என்ன தேவையோ, உங்களுக்கு என்ன தேவையோ, அதை நோக்கி நீங்கள் நடைபோட வேண்டும். தமிழ்நாட்டின் மாணவர் சமுதாயத்திற்கு படிப்புக்கு திராவிட மாடல் அரசு இருக்கிறது என்பதை நீங்கள் மறந்துவிட வேண்டாம். அதிலும் குறிப்பாக, உங்கள் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் இருக்கிறார் என்பதை நீங்கள் மறந்துவிட வேண்டாம்.
அதனால்தான், நாம் தமிழ்நாடு முழுவதும் இன்றைக்கு உறுதி எடுத்துக் கொண்டிருக்கிறோம். தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டோம் என்பது நம்முடைய ஒற்றுமையைக் காட்டுகிறது. எனவே, தமிழ்நாட்டின் அடுத்த வளர்ச்சிக்கு அடித்தளமாக இந்தக் கல்வி நிச்சயமாக இருக்கிறது. அதை நீங்கள் நல்ல வகையில் பயன்படுத்திக்கொண்டு, உங்கள் வாழ்க்கையில் நீங்கள் முன்னேற்றம் காண வேண்டும்.”
இவ்வாறு கூறினார்.