

சிறப்பு தீவிர திருத்தத்தைத் தடுப்பதே நம்முன் இப்போதுள்ள ஆகப்பெரும் கடமை என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் நவம்பர் 4 முதல் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நடைபெற்று வருகிறது. இதுகுறித்து கடந்த அக்டோபர் 27 அன்று தேர்தல் ஆணையம் அறிவிப்பை வெளியிட்டது. இதனை எதிர்த்து, திமுக தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதற்கிடையில் திமுக கூட்டணிக் கட்சிகள் மாநிலம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டத்தை அறிவித்தன.
அதன்படி, இன்று திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் உள்ள கட்சியினர், அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர். சென்னையில் மட்டும் 43 இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. சென்னை ராயபுரம் அருகே தங்கசாலை பகுதியில் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம், விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் பங்கேற்று உரையாற்றினர்.
இந்நிலையில், சமூக ஊடகப் பக்கத்தில் ஆர்ப்பாட்டங்களின் படங்களைப் பகிர்ந்துள்ள முதல்வர் மு.க. ஸ்டாலின், சிறப்பு தீவிர திருத்தத்தைத் தடுப்பதே இப்போதுள்ள ஆகப்பெரும் கடமை என்று கூறியுள்ளார். பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது:-
“சிறப்பு தீவிர திருத்தத்தைத் தடுப்பதே நம்முன் இப்போதுள்ள ஆகப்பெரும் கடமை!
ஒருபுறம், மக்களாட்சியின் அடிப்படையான வாக்குரிமையையே பறிக்கும் சிறப்பு தீவிர திருத்தம் எனும் ஆபத்துக்கு எதிராகச் சட்டப் போராட்டம் - களப் போராட்டம், மறுபுறம், தொடங்கப்பட்டுவிட்ட சிறப்பு தீவிர திருத்தப் பணிகளில் குளறுபடிகளைத் தடுத்திடக் கட்டுப்பாட்டறை மற்றும் உதவி எண்கள்.
களப் போராட்டத்தில், இன்று தமிழ்நாடெங்கும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பதாகைகளை ஏந்தியும் - கண்டன முழக்கங்களை எழுப்பியும் சிறப்பு தீவிர திருத்தம் எனும் பேராபத்துக்கு எதிராகக் கூடியுள்ள மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியினர். தொடர்ந்து செயலாற்றுவோம்! நம் மக்களின் வாக்குரிமையைப் பாதுகாப்போம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
Preventing special intensive revision is our greatest duty at present, said Chief Minister M.K. Stalin.