திமுக ஆட்சியில் 43 அணைகள் கட்டப்பட்டுள்ளன: முதலமைச்சர் ஸ்டாலின் | MK Stalin |

மாநிலம் முழுவதும் புதிதாக 121 தடுப்பனைகள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன....
மாம்மல்லன் நீர்த்தேகத்திற்கு அடிக்கல் நாட்டி உரையாற்றிய முதலமைச்சர் ஸ்டாலின்
மாம்மல்லன் நீர்த்தேகத்திற்கு அடிக்கல் நாட்டி உரையாற்றிய முதலமைச்சர் ஸ்டாலின்TN DIPR
2 min read

திமுக ஆட்சிக்காலத்தில் தமிழ்நாட்டில் அணைகளே கட்டப்படவில்லை என்று பெரிய பொய்யைச் சொல்வார்கள் என்று கூறிய முதலமைச்சர் ஸ்டாலின் அணைகளின் விவரங்களைப் பட்டியலிட்டுப் பேசினார்.

செங்கல்பட்டு மாவட்டம் கிழக்கு கடற்கரைச் சாலை நெம்மேலியில் ரூ. 342.6 கோடி மதிப்பில் அமையவுள்ள மாமல்லன் நீர்த்தேக்கத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டினார். அதன்பின் நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: அனைத்து வகையிலும் இயற்கையுடன் இணைந்ததுதான் பழந்தமிழரின் வாழ்வு. அதன் தொடர்ச்சியாகத்தான் திராவிட மாடல் அரசு மாமல்லன் நீர்த்தேக்கத்திற்கு அடிக்கல் நாட்டியுள்ளது. சென்னையின் வளர்ந்துவரும் பகுதிகளுக்காக நம் அரசு செய்த முக்கியமான பணியாக இது வரலாற்றில் நினைவுகூரப்படும்.

திமுக ஆட்சியில் 43 அணைகள்

பலர் உண்மை தெரிந்தும் திமுக ஆட்சியில் அணைகளைக் கட்டவில்லை என்று பொய்யைச் சொல்கிறார்கள். ஆனால் 1967-ல் திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து 2011 வரை தமிழ்நாட்டில் 43 அணைகள் கட்டப்பட்டுள்ளன. திராவிட மாடல் ஆட்சி அமைந்ததும் நீர்வளத்தைப் பெருக்கப் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். கடந்த ஐந்து ஆண்டுகளாக மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டி, குறித்த நேரத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. காவிரி டெல்டா பகுதிகளில் ரூ. 459 கோடி மதிப்பீட்டில் 24,833 கி.மீட்டர் நீளத்திற்குச் சிறந்த முறையில் வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டுள்ளன. மாநிலம் முழுவதும் புதிதாக 121 தடுப்பனைகள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 63 அணைக்கட்டுகள் அமைக்கும் பணிகளும் நடந்துள்ளன.

நீர் மேலாண்மை முக்கியமானது

ஒரு நாட்டிற்கு நிதி மேலாண்மையைப் போலவே நீர் மேலாண்மையும் முக்கியமானது. அதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதை உணர்ந்து திராவிட மாடல் அரசு செயல்படுகிறது. நீர் நிலைகளை மாசுபடாமல் காத்து வருகிறோம். நிலத்தடி நீரை அதிகரித்த அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடல் நீரைக் குடிநீராக்கும் முயற்சியையும் மேற்கொண்டுள்ளோம். அரசு என்னதான் ஒருபக்கம் நடவடிக்கைகள் எடுத்தாலும் மக்கள் தங்கள் கடமைகளை உணர்ந்து செயல்பட வேண்டும்.

தன்னார்வல நிறுவனங்களுக்குப் பாராட்டு

நீர்வளத்துறை பிற துறைகளுடன் இணைந்து தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள கால்வாய்கள் மற்றும் நீர்நிலைகளைச் சுத்தப்படுத்தி மக்கள் மற்றும் விவசாயிகள் நீண்ட கால பலன்களைப் பெறும் வகையில் நிலையான நீர் மேலாண்மைகளை உறுதி செய்யும் வகையில் தன்னார்வல தொண்டு நிறுவனங்களைப் பாராட்டி இன்று விருதுகளை வழங்கி கௌரவித்தது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது.

நிறைய திறப்பு விழாக்கள் காத்திருக்கின்றன

தலைநகர் சென்னைக்காக திமுக அரசு நிறைய திட்டங்களைச் செய்து வருகிறது. அடுத்தடுத்து இன்னும் நிறைய திறப்பு விழாக்கள் காத்திருக்கின்றன. இன்று நான் தொடங்கிய நீர்த்தேக்கப் பணி, மக்களுக்கு காலம்தோறும் வாழ்வளிக்கும்” என்றார்.

Summary

Chief Minister Stalin today laid the foundation stone for the Mamallan Reservoir, which will be built at a cost of Rs. 342.6 crore at Nemmeli on the East Coast Road in Chengalpattu district.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in