
குறைந்த கட்டணத்தில் இதழியல் படிப்பை அளிக்கும் வகையில் தமிழக அரசு சார்பில் அமைக்கப்பட்டுள்ள `சென்னை இதழியல் நிறுவனத்தை’ முதல்வர் ஸ்டாலின் இன்று (ஆக. 25) தொடங்கி வைத்தார்.
இதழியல் துறையில் ஆர்வம் உள்ள இளைஞர்களை ஊக்குவிக்கும் நோக்குடனும், வளர்ந்து வரும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப ஊடக கல்வியை வழங்குவதற்காகவும், இதழியலை தொழிலாக தொடங்க விரும்பும் தமிழக இளைஞர்களுக்கு குறைந்த கட்டணத்தில் முதுநிலை பட்டயப் படிப்பை வழங்குவதற்காகவும் தமிழக அரசு சார்பில் இதழியல் நிறுவனத்தை தொடங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.
இதன்படி, சென்னையில் 2025-26-ம் கல்வியாண்டில் `சென்னை இதழியல் கல்வி நிறுவனத்தை’ தொடங்க ரூ.7.75 கோடி ஒதுக்கி அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து நிறுனங்கள் சட்டத்தின்கீழ் சென்னை இதழியல் நிறுவனம் பதிவு செய்யப்பட்டது.
இந்த நிறுவனத்தில் இதழியல் முதுநிலை பட்டயப் படிப்பை நடப்பு (2025- 26) கல்வியாண்டு முதல் தொடங்க தமிழக அரசு ஒப்புதல் வழங்கியது.
இந்த இதழியல் நிறுவனத்தின் நிர்வாகக் குழுத் தலைவராக `தி இந்து’ குழும இயக்குநரும், `தி இந்து’ நாளிதழின் முன்னாள் முதன்மை ஆசிரியருமான என். ரவியும், அதன் தலைமை இயக்குநராக மூத்த பத்திரிகையாளர் ஏ.எஸ். பன்னீர்செல்வனும் நியமிக்கப்பட்டனர்.
இந்நிலையில், சென்னை கோட்டூர்புரத்தில் அமைக்கப்பட்டுள்ள சென்னை இதழியல் கல்வி நிறுவனத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று (ஆக. 25) தொடங்கி வைத்தார். தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன், திராவிடர் கழகத்தின் தலைவர் கி. வீரமணி, நக்கீரன் ஆர். கோபால் உள்ளிட்ட பத்திரிகையாளர்கள் உடனிருந்தனர்.