அன்புச் சோலை மையங்கள் தொடக்க விழா: கேரம் விளையாடிய முதலமைச்சர் ஸ்டாலின் | MK Stalin |

மாநிலம் முழுவதும் மூத்த குடிமக்களின் நலம் பேணும் வகையில் 25 அன்புச் சோலை மையங்கள் தொடக்கம்...
திருச்சியில் கேரம் விளையாடிய முதல்வர் மு.க. ஸ்டாலின்
திருச்சியில் கேரம் விளையாடிய முதல்வர் மு.க. ஸ்டாலின்
2 min read

தமிழ்நாட்டில் மூத்த குடிமக்களின் நல்வாழ்வை மேம்படுத்துவதற்காக 25 அன்புச் சோலை மையங்களை முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் இரண்டு நாள் பயணமாக புதுக்கோட்டை, திருச்சி மாவட்டங்களில் கள ஆய்வு மேற்கொண்டார். அதில் ஒரு பகுதியாக, திருச்சி பொன்மலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநிலம் முழுவதும் ரூ. 10 கோடி செலவில் 25 அன்புச் சோலை மையங்களைத் தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.என். நேரு, கீதா ஜீவன், அன்பில் மகேஸ் பொய்யாமொழி, நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா உள்ளிட்டோர் பங்கேற்றனர். திருச்சியில் அன்புச் சோலை மையத்தைத் தொடங்கி வைத்த முதல்வர், மற்ற பகுதிகளில் உள்ள மையங்களைக் காணொலிக் காட்சி மூலம் தொடங்கி வைத்தார். தொடர்ந்து நிகழ்ச்சியில் மகளிர் சுயஉதவிக் குழுவினரால் தயாரிக்கப்பட்ட சிறுதானிய உணவு வகைகள் மற்றும் சத்துமாவு கொண்ட பெட்டகங்களை மூத்த குடிமக்களுக்கு வழங்கி அவர்களுடன் கலந்துரையாடினார். அப்போது அவர்களுடன் கேரம் விளையாடினார்.

இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

“தமிழ்நாட்டில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், மூத்த குடிமக்களின் ஒட்டுமொத்த நல்வாழ்வை உறுதி செய்வதற்காக ஒரு மாநகராட்சியில் இரண்டு அன்புச் சோலைகள் வீதம், மதுரை, கோயம்புத்தூர். திருச்சி, சேலம், திருப்பூர், ஈரோடு, தூத்துக்குடி, வேலூர், தஞ்சாவூர் மற்றும் திண்டுக்கல் ஆகிய 10 மாநகராட்சிகளில் 20 அன்புச் சோலைகள் அமைக்கப்படுகின்றன. மேலும் 2 தொழில்துறை மாவட்டங்களான ராணிப்பேட்டை மற்றும் கிருஷ்ணகிரி, பெருநகர மாநகராட்சியான சென்னையின் தண்டையார்பேட்டை, சோழிங்கநல்லூர் மற்றும் விருகம்பாக்கம் ஆகிய மூன்று இடங்களில் அன்புச் சோலை மையங்கள் அமைக்கப்படுகின்றன. இவற்றில் மூத்த குடிமக்களுக்கு இயன்முறை மருத்துவ சேவைகள், யோகா, பொழுதுபோக்கு அம்சங்கள் மற்றும் நூலகம் போன்றவை வழங்கப்படவுள்ளன.

முதியோருக்கு வழங்கப்படும் இயன்முறை மருத்துவ சேவைகள், பொழுதுபோக்கு, திறன் மேம்பாடு நிகழ்வுகள் மூலம் மனமும், உடலும் சுறுசுறுப்புடன் இருக்கச் செய்தல், முதியோர் ஒருவருடன் ஒருவர் தொடர்பு கொண்டு, சமூக உறவுகளை வலுப்படுத்துதல், ஆண், பெண் இருவரும் வேலை பார்க்கும் குடும்பங்களுக்கு, அவர்களது மூத்த உறுப்பினர்கள் பாதுகாப்பாக பராமரிக்கப்படுவதை உறுதி செய்தல் ஆகியவற்றை நோக்கமாக கொண்டு அன்புச் சோலை மையங்கள் செயல்படும்.

இத்திட்டம் முதியோர்களை போற்றும் தமிழ் பாரம்பரியத்தை பிரதிபலிப்பதோடு, முதியோர்களின் பாதுகாப்பையும், நன்முறையில் பராமரிப்பதையும் உறுதி செய்வதால் அவர்களது குடும்பத்தினருக்கு மன அமைதியை ஏற்படுத்துகிறது. இதனால் முழுமையான நிறுவனம் சார்ந்த பராமரிப்பு தேவையை குறைத்தும், குடும்ப பிணைப்பை வலுப்படுத்தவும் உதவுகிறது. மேலும், வேலைக்கு செல்ல ஆர்வமுள்ள பெண்கள், தங்கள் வீட்டிலுள்ள முதியோர்களை பகல் நேரங்களில் பராமரிக்க இயலாததால், வேலைக்கு செல்ல இயலாத நிலையுள்ளது. எனவே, வேலைக்கு செல்லும் பெண்களுக்காகவும், வேலைக்கு செல்ல ஆர்வமுள்ள பெண்களுக்காகவும், அவர்களது வீட்டு முதியவர்களுக்கு தனிமையில்லாமல் நேரத்தை சிறந்த முறையில் செலவு செய்து, மகிழ்வாக வாழ வழிவகை செய்யும் நோக்கத்தோடும் இம்மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Summary

Chief Minister M.K. Stalin inaugurated 25 Anbu Solai centers in Tamil Nadu to improve the well-being of senior citizens.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in