கிருஷ்ணகிரியில் பள்ளி மாணவிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்து முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் தனியார் பள்ளியில் என்சிசி முகாம் நடத்துவதாகக் கூறி என்சிசி (தேசிய மாணவர் படை) பயிற்சியாளர் சிவராமன் என்பவர் பள்ளி மாணவிகளைப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாகப் புகார் எழுந்துள்ளது. இதுதொடர்பாக சிவராமன், பள்ளி முதல்வர் சதீஷ்குமார் உள்பட 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
இதுதொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்படும் சிவராமன் என்பவருக்கும் என்சிசி-க்கும் தொடர்பு இல்லை என்பதும் போலியாக என்சிசி முகாம் நடத்தியுள்ளதும் தெரியவந்துள்ளது. என்சிசி தரப்பிலும் இதுதொடர்பாக விளக்கம் கொடுக்கப்பட்டது.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளவர்கள் நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளார்கள்.
இந்த நிலையில், இதுதொடர்பாக விசாரணை நடத்தி 15 நாள்களுக்குள் அனைத்து நடவடிக்கைகளையும் முடிக்க முதல்வர் மு.க. ஸ்டாலின் சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்துள்ளார். பவானீஸ்வர் ஐபிஎஸ் தலைமையில் இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் சமூகநலத் துறைச் செயலாளர் ஜெயஸ்ரீ முரளிதரன் தலைமையில் பல்நோக்கு குழு அமைக்கவும் முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இந்தக் குழு இந்தச் சம்பவங்களால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகள் மற்றும் அவர்களின் பெற்றோர்களோடு கலந்தாலோசித்து, அவர்களின் நலன் காக்கத் தேவையான நடவடிக்கைகள் குறித்தும், இந்தச் சம்பவம் ஏற்படக் காரணமாக இருந்த சூழ்நிலைகள் குறித்தும் ஆராய்ந்து, இதுபோன்ற சம்பவங்கள் இனிமேல் நடைபெறாமல் தடுப்பது குறித்தும் உரிய பரிந்துரைகளை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.