3,186 காவல்துறை மற்றும் சீருடை அலுவலர்களுக்கு முதல்வர் பதக்கங்கள்: தமிழக அரசு

பதக்கங்களைப் பெறுபவர்களுக்கு 2025 பிப்ரவரி 1-ம் தேதி முதல், மாதாந்திர பதக்கப்படி ரூ. 400 வழங்கப்படும்.
3,186 காவல்துறை மற்றும் சீருடை அலுவலர்களுக்கு முதல்வர் பதக்கங்கள்: தமிழக அரசு
ANI
1 min read

பொங்கல் திருநாளை ஒட்டி 3,186 தமிழக காவல்துறை மற்றும் சீருடை அலுவலர்கள், பணியாளர்களுக்கு பொங்கல் பதக்கங்கள் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப்பணி, சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் ஆகிய துறைகளில் பணியாற்றும் பணியாளர்கள், பணியின்போது வெளிப்படுத்தும் நிகரற்ற செயல்பாடுகளை அங்கீகரிக்கும் வகையிலும், அவர்களை ஊக்குவிக்கும் விதமாகவும் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் திருநாளன்று தமிழக முதலமைச்சரின் பதக்கங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், நடப்பாண்டில் காவலர் நிலை-2, காவலர் நிலை-1, தலைமைக் காவலர் மற்றும் சிறப்பு சார்பு ஆய்வாளர் நிலைகளில் உள்ள காவல் துறையைச் சேர்ந்த 3000 பணியாளர்களுக்கு `தமிழக முதலமைச்சரின் காவல் பதக்கங்கள்’ வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

மேலும், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையில் உள்ள 120 அலுவலர்களுக்கும், சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறையில் உள்ள 60 பேர்களுக்கும் `தமிழக முதலமைச்சரின் சிறப்பு பணிப்பதக்கங்கள்’ வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பதக்கங்கள் பெறுபவர்களுக்கு 2025 பிப்ரவரி 1-ம் தேதி முதல், மாதாந்திர பதக்கப்படி ரூ. 400 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், காவல் வானொலி பிரிவு, மோப்ப நாய் படைப் பிரிவு மற்றும் காவல் புகைப்படக் கலைஞர்கள் பிரிவுகளில் 2 நபர்கள் வீதம், மொத்தம் 6 அதிகாரிகள் மற்றும் அலுவலர்களுக்கு "தமிழக முதலமைச்சரின் காவல் தொழில்நுட்ப சிறப்புப் பணிப் பதக்கம்" வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இப்பதக்கங்களைப் பெறும் அலுவலர்களுக்கு முதல்வரின் கையொப்பத்துடன் கூடிய பதக்கச்சுருள் வழங்கப்படும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in