நேற்று (செப்.05) சென்னையில் உள்ள அரசுப் பள்ளியில் பேச்சாளர் ஒருவர் நிகழ்த்திய உரைக்கு அந்தப் பள்ளியின் ஆசிரியர் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதம் செய்த காணொளி சமூக வலைதளங்களில் வெளியாகி பேசுபொருளானது. இதைத் தொடர்ந்து `என் பகுதிக்கு வந்து என் ஆசிரியரை அவமானப்படுத்திய பேச்சாளர் மகாவிஷ்ணுவை நான் சும்மா விடமாட்டேன்’ என்று பேசினார் பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.
சென்னை அசோக் நகர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேச்சாளர் மகாவிஷ்ணு என்பவர், மாணவிகள் மத்தியில் மறு பிறவி, முற்பிறவிகளில் செய்யும் பாவங்கள் போன்றவை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பிற்போக்குத்தனமாக உரை நிகழ்த்தினார்.
பள்ளி மாணவிகளிடம் இவ்வாறு உரை நிகழ்த்துவது தவறு என்று கூறி பேச்சாளருடன் அப்பள்ளியில் பணிபுரியும் மாற்றுத்திறனாளி ஆசிரியர் சங்கர் என்பவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதன் பிறகு ஆசிரியர் சங்கரை அவமதிக்கும் வகையில் பேசினார் பேச்சாளர் மகாவிஷ்ணு. இந்த நிகழ்வு குறித்த காணொளி நேற்று சமூக வலைதளங்களில் வெளியாகி பேசுபொருளானது.
அரசுப் பள்ளி நிகழ்வை முன்வைத்து இன்று காலை தன் எக்ஸ் சமூக வலைதளக் கணக்கில் பதிவிட்ட முதல்வர் ஸ்டாலின், `தமிழ்நாட்டின் எதிர்காலச் சந்ததியினரான நம் பள்ளிக் குழந்தைகள் அனைவரும், முற்போக்கான - அறிவியல் பூர்வமான கருத்துகளையும் வாழ்க்கை நெறிகளையும் பெற்றிடும் வகையில், மாநிலத்தில் உள்ள பள்ளிகளில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளை வரைமுறைப்படுத்துவதற்கான புதிய வழிமுறைகளை வகுத்து வெளியிட நான் ஆணையிட்டுள்ளேன்’ என்றார்.
இதைத் தொடர்ந்து இன்று காலை அசோக் நகர் பள்ளியில் நடந்த அரசு விழாவில் பேச்சாளாரின் நிகழ்ச்சி குறித்து மாணவிகள் மத்தியில் பேசிய தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, `மாணவச் செல்வங்கள் படிப்பில் அதிக கவனத்தைச் செலுத்துங்கள்.
நீங்கள் பகுத்தறிவுடன் இருக்க வேண்டும். யார் எது பேசினாலும் அது சரிதானா என்று நீங்கள் சுயமாகச் சிந்தித்துப் பார்த்து, எது சரி எது தவறு என்பதை முழுமையாகப் புரிந்துகொள்ள வேண்டும். தவறுகளை யார் செய்தாலும் அவர்கள் நம் சமுதாயத்திலிருந்து மட்டுமல்லாமல் நமது பள்ளிக்கல்வித்துறையிடம் இருந்தும் தப்பிக்க முடியாது. தவறு செய்தவர்களுக்கான தண்டனை நிச்சயம் உண்டு’ என்றார்.
இதற்கு பிறகு பேச்சாளரின் பிற்போக்குத்தனமான கருத்துக்களை எதிர்த்துக் கேள்வி எழுப்பிய ஆசிரியர் சங்கரைப் பாராட்டினார் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி. அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர், `2-3 நாட்களில் விசாரணை நடத்தி, தவறு யார் செய்திருந்தாலும் துறை சார்ந்து நடவடிக்கை எடுக்கப்படும்.
சம்மந்தப்பட்ட ஆசிரியர் சங்கர் புகார் அளித்தாலும், அளிக்காவிட்டாலும் அந்தக் காணொளியில் பார்த்ததை வைத்து அந்த மகாவிஷ்ணு என்ற நபர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். என் பகுதிக்கு வந்து என் ஆசிரியரை அவமானப்படுத்திய மகாவிஷ்ணுவை நான் சும்மா விடமாட்டேன்’ என்றார்.
பேச்சாளரின் நிகழ்ச்சி குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பள்ளி தலைமை ஆசிரியர் தமிழரசி `இது விழிப்புணர்வு நிகழ்ச்சி, எங்கள் மாணவிகளை ஊக்கப்படுத்தும் வகையில் இதை நடத்தினோம்’ என்று பதிலளித்தார்.
பள்ளிக்கல்வித்துறை அமைச்சரின் நிகழ்ச்சி நிறைவுற்றபிறகு, காலை 11 மணி அளவில் அசோக் நகர் அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இதற்குப் பிறகு தலைமை ஆசிரியர் தமிழரசி திருவள்ளூர் மாவட்டத்துக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டதாக செய்தி வெளியானது.