
நகர்ப்புறங்களில் இருக்கும் அனைத்து அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளுக்கும் முதல்வரின் காலை உணவு திட்டத்தின் விரிவாக்கத்தை முதல்வர் ஸ்டாலின் நாளை (ஆக. 26) சென்னையில் தொடங்கி வைப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் முதல்வரின் காலை உணவுத் திட்டத்தை, நாட்டிலேயே முதல்முறையாக, கடந்த 2022 செப்டம்பர் 15 அன்று பேரறிஞர் அண்ணா பிறந்தநாளின்போது மதுரை ஆதிமூலம் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இதைத் தொடர்ந்து, கடந்த 2023 ஆகஸ்ட் 25 அன்று, முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த ஊரான திருக்குவளையில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் வைத்து காலை உணவு திட்ட விரிவாக்கத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இதன் தொடர்ச்சியாக, கடந்த 2024 ஜூலை 15 அன்று, காமராஜர் பிறந்தநாளில் திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கீழச்சேரி கிராமத்தில் உள்ள புனித அன்னாள் அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளியில் முதல்வரின் காலை உணவு திட்டத்தின் விரிவாக்கத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இதன் மூலம் ஊரகப் பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் முதல்வரின் காலை உணவு திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டது.
இந்நிலையில், நகர்ப்புறங்களில் உள்ள அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் முதல்வரின் காலை உணவு திட்ட விரிவாக்கத்தை சென்னை மயிலாப்பூரில் உள்ள புனித சூசையப்பர் தொடக்கப் பள்ளியில் முதல்வர் ஸ்டாலின் நாளை (ஆக. 26) தொடங்கி வைக்கிறார்.
இதனால் நகர்ப்புறங்களில் உள்ள 2,430 அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளிகளில் பயிலும் 3.05 லட்சம் மாணவ, மாணவிகள் தினமும் பயன்பெறுவார்கள் என்று கூறப்படுகிறது.
மேலும், இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் பங்கேற்பதாக தகவல் வெளியாகியுள்ளது.