
சிறுவன் கடத்தல் வழக்கில் பூவை ஜெகன்மூர்த்திக்கு உச்ச நீதிமன்றம் முன் ஜாமின் வழங்கியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் களாம்பாக்கத்தைச் சேர்ந்த தனுஷ் என்கிற இளைஞர் தேனியைச் சேர்ந்த விஜயஸ்ரீ என்ற பெண்ணை காதலித்துப் பதிவுத் திருமணம் செய்துள்ளார். இதைத் தொடர்ந்து அவர்கள் இருவரும் தலைமறைவாகவே, பெண்ணின் குடும்பத்தினர் தனுஷின் தம்பியை கடத்தியுள்ளனர்.
இந்த விவகாரத்தில், சிறுவனின் தாயார் லட்சுமி அளித்த புகாரின் அடிப்படையில், புரட்சி பாரதம் கட்சி தலைவரும், கே.வி. குப்பம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான பூவை ஜெகன்மூர்த்தி, ஏடிஜிபி ஜெயராம் உள்ளிட்டோர் மீது திருவலாங்காடு காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக இந்த விவகாரத்தில் சம்மந்தப்பட்ட பெண்ணின் தந்தை உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். இதற்கிடையே, முன் ஜாமின் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பூவை ஜெகன்மூர்த்தி மனுத்தாக்கல் செய்திருந்தார்.
மனுவை விசாரித்த நீதிபதி வேல்முருகன் பிறப்பித்த உத்தரவை அடுத்து, பூவை ஜெகன்மூர்த்தி நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார். காவல்துறை விசாரணையில் போதிய ஒத்துழைப்பு வழங்குமாறு நீதிபதி வேல்முருகன் அவருக்கு உத்தரவிட்டார்.
மேலும், இந்த விவகாரத்தில் தொடர்புடையதாக குற்றம்சாட்டப்படும் ஏடிஜிபி ஜெயராமை கைது செய்து விசாரிக்க நீதிபதி உத்தரவிட்டார். இதன் தொடர்ச்சியாக தமிழக உள்துறை செயலரால், ஏடிஜிபி ஜெயராம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். பூவை ஜெகன்மூர்த்தியின் முன் ஜாமின் மனு மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, பூவை ஜெகன்மூர்த்தியின் முன் ஜாமின் மனு மீதான விசாரணை கடந்த ஜூன் 27 அன்று நீதிபதி ஜெயச்சந்திரன் முன்னிலையில் நடைபெற்றது. அரசுத் தரப்பு மற்றும் ஜெகன்மூர்த்தி தரப்பின் வாதங்களைக் கேட்ட நீதிபதி ஜெயச்சந்திரன், அவரது முன் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து எந்நெரமும் காவல்துறையினரால் கைது செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஜெகன்மூர்த்தி தலைமறைவானார். ஜெகன்மூர்த்தியை கைது செய்ய 4 தனிப்படை அமைக்கப்பட்டதாக தகவல் வெளியானது.
இதற்கிடையே, சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்தும், பூவை ஜெகன்மூர்த்திக்கு முன் ஜாமின் கோரியும் வழக்கறிஞர் ராம்சங்கர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் ஜெகன்மூர்த்திக்கு முன் ஜாமின் வழங்கி உத்தரவிட்டது.