சிறப்பு தீவிர திருத்தப் பணிகளைப் புறக்கணித்து வேலை நிறுத்தம் செய்தால் சம்பளம் கிடையாது என்று தலைமைச் செயலர் முருகானந்தம் எச்சரித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
2021 தேர்தல் வாக்குறுதியின்படி பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக அறிவிக்க வேண்டும், ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டைக் களைய வேண்டும், தொடக்கக் கல்வி துறையை பாதிக்கும் அரசாணை 243-ஐ ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, செவ்வாய்க்கிழமை ஜாக்டோ ஜியோ சார்பில் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டது.
இது தொடர்பாக பள்ளிகள், சத்துணவு அங்கன்வாடி, மருத்துவ மையங்களில் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் துண்டு பிரசுரம் வழங்கி பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தனர். மேலும் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் தமிழ்நாடு அனைத்து மருந்தாளுநர் சங்கத்தினரும் பங்கேற்க முடிவெடுத்தனர். அரசு மருத்துவமனைகளில் உள்ள மருந்தாளுநர் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், கூடுதல் மருந்தாளுநர் பணியிடங்களை உருவாக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை அவர்கள் வலியுறுத்த திட்டமிட்டனர்.
இந்நிலையில், வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால் சம்பளம் கிடையாது என்று தலைமைச் செயலாளர் முருகானந்தம் எச்சரிக்கை விடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஏற்கெனவே சிறப்பு தீவிர திருத்தம் காரணமாகப் பணிச்சுமை அதிகமாக இருப்பதாக வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கம் செவ்வாய்க்கிழமை முதல் பணிகளைப் புறக்கணிக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளார்கள். இதையடுத்து ஜாக்டோ ஜியோ அமைப்பும் வேலை நிறுத்தப் போராட்டம் செய்யவுள்ள நிலையில், சிறப்பு தீவிர திருத்தப் பணிகளைப் புறக்கணித்து விடுமுறை எடுத்தால் சம்பளம் கிடையாது என்றும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தலைமைச் செயலர் முருகானந்தம் எச்சரிக்கை விடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
Chief Secretary Muruganantham has warned that if the government employees ignore the special intensive revision work and go on strike, they will not receive their salaries.