
ஆளுநருக்கான அதிகாரங்கள் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தீர்ப்பு குறித்து, குடியரசுத் தலைவர் மூலமாக உச்ச நீதிமன்றத்திடம் விளக்கம் கேட்டுள்ளது மத்திய அரசு. இந்த விவகாரத்தில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழக ஆளுநருக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் வழங்கப்பட்ட உச்ச நீதிமன்ற தீர்ப்பை முன்வைத்து, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, உச்ச நீதிமன்றத்துக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அதில், ஆளுநர்களுக்கும் குடியரசுத் தலைவருக்கும் காலக்கெடு விதிக்க உச்ச நீதிமன்றத்திற்கு அதிகாரம் இருக்கிறதா என்பது உள்ளிட்ட 14 கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன. இந்நிலையில், குடியரசுத் தலைவர் மூலமாக உச்ச நீதிமன்றத்திற்கு கேள்விகளை எழுப்பியுள்ள மத்திய அரசுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தன் எக்ஸ் கணக்கில் முதல்வர் ஸ்டாலின் இன்று (மே 15) வெளியிட்டுள்ள பதிவில் கூறியதாவது,
`மக்கள் வழங்கிய தீர்ப்பை குறைத்து மதிப்பிடும் வகையில், பாஜகவின் கட்டளைப்படி தமிழக ஆளுநர் செயல்பட்டார் என்பதை மத்திய அரசின் இந்த முயற்சி தெளிவாக அம்பலப்படுத்துகிறது.
இது, ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளை, மத்திய அரசின் முகவர்களாகச் செயல்படும் ஆளுநர்களின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து பலவீனப்படுத்தும் முயற்சியே தவிர வேறில்லை. சட்டத்தின் மகத்துவத்தையும், அரசியலமைப்புச் சட்டத்தின் இறுதி விளக்கவுரையாளராக இருக்கும் உச்ச நீதிமன்றத்தின் அதிகாரத்தையும் எதிர்த்து இது நேரடியாக சவால் விடுகிறது.
1) மசோதாக்கள் மீது ஆளுநர்கள் முடிவெடுக்க காலக்கெடு விதிப்பதை எதிர்ப்பது ஏன்?
2) மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் ஆளுநர்கள் முடக்குவதை சட்டப்பூர்வமாக்க பாஜக முயற்சிக்கிறதா?
3) பாஜக அல்லாத கட்சிகள் ஆளும் மாநிலங்களை மத்திய அரசு முடக்கப் பார்க்கிறதா?
இந்த மோசமான சூழ்நிலையில், அரசியலமைப்பைப் பாதுகாக்கும் சட்டப் போராட்டத்தில் இணையுமாறு பாஜக அல்லாத அனைத்து மாநில அரசுகளையும், கட்சித் தலைவர்களையும் நான் கேட்டுக்கொள்கிறேன்’ என்றார்.