மாற்றுத் திறனாளிகள் கலைஞரை ரோல் மாடலாக எடுத்துக்கொள்ள வேண்டும்: முதலமைச்சர் ஸ்டாலின் | MK Stalin |

மாற்றுத் திறனாளிகளுக்கு வேண்டியது கருணை அல்ல உரிமை என்பதை உணர்ந்து செயல்படுகிறோம்...
மாற்றுத் திறனாளிகள் விழாவில் உரையாற்றிய முதலமைச்சர் ஸ்டாலின்
மாற்றுத் திறனாளிகள் விழாவில் உரையாற்றிய முதலமைச்சர் ஸ்டாலின்
2 min read

மாற்றுத் திறனாளிகளுக்கு வேண்டியது கருணை அல்ல உரிமை என்று கூறிய முதலமைச்சர் ஸ்டாலின், அவர்கள் கலைஞர் கருணாநிதியை ரோல் மாடலாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று பேசினார்.

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு மாற்றுத் திறனாளிகள் விழா நடைபெற்றது. அதில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் கே.என். நேரு, மா.சுப்பிரமணியன், கீதா ஜீவன், நடிகை ரோகிணி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அப்போது நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர் கூறியதாவது:-

“கடந்த காலங்களில் மாற்றுத் திறனாளிகள் தினத்தை எப்படியெல்லாம் புறக்கணித்தார்கள், என்னென்ன பொறுப்பற்ற சொற்களைப் பயன்படுத்தினார்கள். அந்த வலிமிகுந்த வரலாற்றை நான் அதிகம் பேச விரும்பவில்லை. ஏனென்றால் தற்போது புதிய வரலாறு படைக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. மாற்றுத் திறனாளிகள் நாள் என்பதை முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி உள்ளன்போடு அறிமுகப்படுத்தினார். அவர் வழியில் தான் திராவிட மாடல் அரசும் செயல்பட்டு வருகிறது. மாற்றுத் திறனாளிகளுக்கு வேண்டியது கருணை அல்ல உரிமை என்பதை உணர்ந்து இன்று அரசு செயலாற்றிக் கொண்டிருக்கிறது.

அதன் வெளிப்பாடுதான் மாற்றுத் திறனாளிகளின் பொருளாதார மேம்பாடுக்கான அரசுத்துறைகளில் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. தனியார் துறைகளிலும் சிறப்பு வேலை வாய்ப்பு முகாம்கள் மூலம் வேலைவாய்ப்பு அமைக்கப்படுகிறது. ஒவ்வொரு நிதியாண்டிலும் நிதி ஒதுக்கீட்டை உயர்த்திக் கொண்டே வருகிறோம். 2025 - 26 நிதியாண்டில் ரூ. 1432.77 கோடியாக உயர்த்தியுள்ளோம். மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக 60-க்கும் மேற்பட்ட அரசாணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. மாற்றுத் திறனாளி மாணவர்களின் கல்வி உதவித்தொகை இரு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. இப்படி எத்தனையோ திட்டங்களை நம் அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த வரிசையில்தான் மாற்றுத் திறனாளிகளின் அரசியல் சமூக உரிமையை நிலைநாட்டும் வகையில் ஒரு முக்கியமான சட்டத்தைக் கொண்டு வந்தோம். அதுதான் உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத் திறனாளி ஒருவர் இடம்பெறுவார் என்ற சட்டம். அதன்மூலம் மாபெரும் சமூக உரிமையை வழங்கியிருக்கிறோம். இன்று நீங்கள் மக்கள் பிரதிநிகளாக ஆகியிருப்பது மூலம், சமூகத்தில் மக்களாட்சிக்கான உண்மையான பொருளை உருவாகியுள்ளோம்.

இப்போதும், இவர்கள் எல்லாம் மக்கள் பிரதிநிதிகளா என்று சில பிற்போக்குவாதிகள் ஏளனமாக நினைக்கலாம். அவர்கள் தரம் அவ்வளவுதான். அதைப்பற்றி நாம் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை.

எந்த நிலையிலும் நீங்கள் தன்னம்பிக்கையை மட்டும் விட்டு விடக்கூடாது. சோர்வடையக் கூடாது. அதற்கு நீங்கள் கலைஞர் கருணாநிதியை முன்னோடியாக எடுத்துக் கொண்டு செயல்படவேண்டும். அவருக்கு ஒருமுறை விபத்து ஏற்பட்டது. அதனால் கண்ணில் பாதிப்பு உண்டானது. ஆனால் அந்த வலிகளைப் பொறுத்துக்கொண்டு இறுதி வரை சமூகத்திற்காக உழைத்தார். ஏராளமான இலக்கிய படைப்புகளையும், தமிழ்நாட்டின் வரலாற்றைத் திருத்தி எழுதிய அறிக்கைகளையும் எழுதினார். கண்ணில் ஏற்பட்ட பாதிப்பு அவர் மனதைப் பாதிக்கவில்லை. அவரது முதுமைக் காலத்தில் சக்கர நாற்காலியில்தான் வலம்வந்தார். ஆனால் அதில் அமர்ந்திருந்தபடியே பம்பரமாக உழைத்தார். அந்த ஆற்றல் அரசியலில் அவசியம். மனிதர்கள் அனைவருக்கும் அவசியம். அதை நீங்கள் அனைவரும் வளர்த்துக்கொள்ள வேண்டும்” என்றார்.

Summary

Chief Minister Stalin said that the differently-abled need rights, not mercy. They should take Kalaingnar Karunanidhi as a role model.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in