சென்னையில் பிங்க் ஆட்டோ திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்!

சென்னையில் பிங்க் ஆட்டோ திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்!

ஆட்டோக்களை வாங்க பெண்களுக்கு ரூ. 1 லட்சம் வரை மானியமாக வழங்குகிறது தமிழக அரசு.
Published on

சர்வதேச மகளிர் தினத்தை ஒட்டி சென்னையில் பிங்க் ஆட்டோ திட்டத்தை தொடங்கி வைத்தார் தமிழக முதல்வர் ஸ்டாலின்.

சென்னையில் பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்யும் விதமாகவும், பெண்களுக்கான சுயவேலைவாய்ப்பை உருவாக்கும் விதமாகவும் தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் முதற்கட்டமாக தலா ரூ. 1 லட்சம் வீதம் 250 பெண் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு மானியம் வழங்கப்பட்டது.

இதன் அடிப்படையில், சர்வதேச மகளிர் தினத்தை ஒட்டி 100 இளஞ்சிகப்பு ஆட்டோக்களை நேரு உள்விளையாட்டரங்கத்தில் நடைபெற்ற அரசு விழாவில் கொடியசைத்து தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்.

பெண்கள் சுயதொழிலில் சிறந்து விளங்குவதை ஊக்கப்படுத்தவும், அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும் இந்த திட்டம் வழிவகை செய்வதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இளஞ்சிகப்பு ஆட்டோக்களில் பல்வேறு சிறப்பம்சங்கள் உள்ளன. குறிப்பாக, ஆட்டோக்களுக்கு உள்ளே சானிடைசர்கள், சானிட்டரி நாப்கின், தீயணைப்பான் ஆகியவற்றுடன் ஜிபிஎஸ் கருவியும் பொறுத்தப்பட்டுள்ளன.

மேலும், பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் போன்ற திட்டங்கள் தொடர்பான தகவல்கள், பொது இடங்களில் பெண்களுக்கு பாலியல் தொல்லைகள் ஏற்பட்டால் அதை கையாள்வது குறித்த தகவல்கள், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தால் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்த விவரங்கள் அடங்கிய முற்றம் மாத இதழ், உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு மலர், பெண்களுக்கான ஒருங்கிணைந்த சேவை மையத்தை அணுகும் வழிமுறைகள், தமிழக சமூகநலத்துறையால் செயல்படுத்தப்படும் திட்டங்கள் தொடர்பான தகவல்கள் ஆகியவை இந்த ஆட்டோக்களில் வைக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து, நகர்புற சுய உதவிக்குழுக்களைச் சேர்ந்த மகளிருக்கு, தமிழக சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை சார்பில் ரூ. 2.41 கோடி மதிப்பிலான 50 பசுமை ஆட்டோக்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்.

அதன்பிறகு, தமிழக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை சார்பில் 100 மஞ்சள் நிற ஆட்டோக்களையும் அவர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

logo
Kizhakku News
kizhakkunews.in