கல்லூரி மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் சென்னையில் இன்று தொடக்கி வைத்தார்.
உலகம் உங்கள் கையில் என்னும் கருப்பொருளின் கீழ் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியர்க்கு 20 லட்சம் மடிக்கணினிகள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் ஏற்கெனவே அறிவித்திருந்தார்.
இந்தத் திட்டத்தைத் தமிழ்நாடு முழுக்க இரு கட்டங்களாக நிறைவேற்றத் திட்டமிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 10 லட்சம் மடிக்கணினிகள் வழங்கும் திட்டத்தின் தொடக்க விழா தற்போது நடைபெற்று வருகிறது.
சென்னை நந்தம்பாக்கத்திலுள்ள வர்த்தக மைய வளாகத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் மாலை 3 மணியளவில் இந்த விழா நடைபெற்று வருகிறது. அரசு பொறியியல், கலை மற்றும் அறிவியல், மருத்துவம், விவசாயம், சட்டம், பலவகை தொழில்நுட்பக் கல்லூரி, தொழில்துறைப் பயிற்சி போன்ற அனைத்துத் துறைகள் சார்ந்த மாணவர்களுக்கும் 10 லட்சம் மடிக்கணினிகள் வழங்கப்படுகின்றன.
அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், அன்பில் மகேஸ், டிஆர்பி ராஜா உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளார்கள். நடிகர்கள் மணிகண்டன், விஜய் சேதுபதி, கார்த்தி உள்ளிட்டோரும் விருந்தினர்களாக இதில் கலந்துகொண்டிருக்கிறார்கள். இஸ்ரோ முன்னாள் இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டிருந்தார்.
"மாணவர்களை வளர்த்தெடுத்தால் தான் மாநிலம் வளரும், நாடு வளரும். அதனால் தான் நம் ஆட்சியில் நான் முதல்வன், புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன் திட்டங்கள் வரிசையில் தற்போது மடிக்கணினி திட்டம். 20 லட்சம் மடிக்கணினிகளை இளைய சமுதாயத்துக்குக் கொடுக்கவிருக்கிறோம். இதன் முதல் திட்டமாகவே இன்று 10 லட்சம் மடிக்கணினிகள் வழங்கும் திட்டத்தைத் தொடங்கியிருக்கிறோம்.
திராவிட இயக்கம் என்பது அறிவிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இயக்கம். அதனால் தான் அறிவியல் சார்ந்த கண்டுபிடிப்புகளை அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு உடனுக்குடன் கிடைக்க வேண்டும் என நம் ஆட்சி செயல்பட்டு வருகிறது.
வேறொரு சந்தர்ப்பத்தில் நாம் சந்திக்கும்போது உங்களுடைய வெற்றியைச் சொல்லி நீங்கள் மகிழ்ச்சியைடய வேண்டும். அதில் தான் நான் பெருமையடைய முடியும். உலகத்தோடு போட்டி போடுங்கள். அந்தப் போட்டியில் வெற்றி பெறுவதற்கான கருவியைத் தான் இன்று உங்களிடம் கொடுத்துள்ளோம். வெற்றி உங்களுக்காகக் காத்திருக்கிறது. நான் எப்போதும் சொல்வது தான். நீங்கள் எதைப் பற்றியும் கவலைப்பட வேண்டாம். படியுங்கள், படியுங்கள், படியுங்கள். உங்களைப் பார்த்துக்கொள்ள நான் இருக்கிறேன். உங்களுடைய குடும்பத்தைப் பார்த்துக்கொள்ள திராவிட மாடல் அரசு இருக்கிறது.
தமிழ்நாடு உங்களை நம்பி தான் உள்ளது. உலகம் உங்கள் கையில் இருக்கிறது. நீங்கள் வெற்றி பெற்று வாருங்கள். நீங்களும் வெற்றி பெற்று வாருங்கள். நாங்களும் வெற்றி பெற்று வருகிறோம். எப்போதும் உங்களுடனே இருப்போம். தமிழ்நாடு வெல்லட்டும்" என்றார் முதல்வர் மு.க. ஸ்டாலின்.
உரைக்குப் பிறகு மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடக்கி வைத்தார்.
Chief Minister MK Stalin inaugurated Tamil Nadu Governments Laptop Distribution Scheme
| Tamil Nadu Government | Laptop Distribution Scheme | Laptop Scheme | MK Stalin | Udhayanidhi Stalin | Vijay Sethupathi | Tamil Nadu Laptop Distribution Scheme | Free Laptop Scheme Tamil Nadu | Tamil Nadu Education Schemes | DMK Government Schemes | Student Welfare Schemes Tamil Nadu | Government Schemes Tamil Nadu |