சென்னை, திருவள்ளூரில் இன்றும் கனமழைக்கு வாய்ப்பு: சுயாதீன வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் | Rain Update |

வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் 12 மணி நேரத்திற்கு மேல் நீடிக்க வாய்ப்பு...
சென்னை, திருவள்ளூரில் கனமழைக்கு வாய்ப்பு: சுயாதீன வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான்
சென்னை, திருவள்ளூரில் கனமழைக்கு வாய்ப்பு: சுயாதீன வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான்ANI
2 min read

சென்னை அருகே நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 18 மணி நேரம் நீடிப்பதால், சென்னையில் இன்றும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சுயாதீன வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

தென்மேற்கு வங்கக் கடலில் உருவான டிட்வா புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக செயலிழந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இன்று வலுவிழந்துள்ளது. ஆனாலும் சென்னையை ஒட்டிய கடற்கரையில் அது நிலைகொண்டதால், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் நேற்று (டிச. 1) முதல் தொடர் கனமழை பெய்தது. இரவிலும் விடாமல் கனமழை பெய்த நிலையில் இரண்டாவது நாளாக மழை தொடர்கிறது. குறிப்பாக சென்னை அண்ணா சாலை, கிண்டி, சைதாப்பேட்டை, வடபழனி உள்ளிட்ட பகுதிகளிலும், தாம்பரம், பல்லாவரம் உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. இது, அடுத்த 12 மணி நேரத்திற்கும் மேல் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நீடிக்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

“தென்மேற்கு வங்கக் கடலின் மேற்கு மத்திய மற்றும் அதை ஒட்டிய பகுதிகள் மற்றும் வடக்கு தமிழ்நாடு மற்றும் தெற்கு ஆந்திரப் பிரதேச கடற்கரைகளில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், கடந்த 6 மணி நேரத்தில் 3 கி.மீட்டர் வேகத்தில் தென்மேற்கு நோக்கி மெதுவாக வளைந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது. அது, இன்று காலை 0530 மணிக்கு தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டிய மேற்கு மத்திய வங்கக் கடல், வட தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திரப் பிரதேச கடற்கரைகளில் மையம் கொண்டுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், வட தமிழ்நாடு - புதுச்சேரி கடற்கரைகளை நோக்கி மெதுவாக தென்மேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 12 மணி நேரம் தீவிரமாக நீடிக்க வாய்ப்புள்ளது. அதன் பிறகு, கடற்கரையை நோக்கி நகரும் போது, ​​அடுத்த 12 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக பலவீனமடையும்” என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, இந்தக் காற்றழுத்த தாழ்வுப் பகுதி கல்பாக்கம் அருகே கரையைக் கடக்கும் என்று சுயாதீன வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் கணித்துள்ளார். அவரது பதிவில் தெரிவித்துள்ளதாவது:-

“கடந்த 24 மணி நேரமாக நிலைகொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம், சென்னை கடற்கரையை ஒட்டி அமைந்துள்ளது. இதனால் சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களின் சில பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இது, அடுத்த 18 மணி நேரம் சென்னை கடற்கரையை ஒட்டி இருக்கும். பின்னர் மாலை முதல் இரவு வரை கல்பாக்கம் பகுதியைச் சுற்றி சென்னைக்கு தெற்கே கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது சென்னையை விட்டு நகராமல் இருப்பதால் நாளை காலை வரை காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் சென்னை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. குறிப்பாக மதுரை, விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை ஆகிய தென் மாவட்டங்களிலும், புதுச்சேரி, கடலூர், விழுப்புரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களிலும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் திருவள்ளூரில் சில பகுதிகளில் அதிகனமழை பெய்யவும் வாய்ப்பிருக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in