சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையிலான புறநகர் ரயில் சேவை வழக்கம்போல் இயங்கத் தொடங்கிவிட்டதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
தாம்பரத்தில் ரயில்வே யார்டில் மேற்கொள்ளப்பட்ட மேம்பாட்டுப் பணிகள் காரணமாக, கடந்த ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 14 வரை சென்னை கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு மாரக்கத்தில் இயக்கப்படும் 55 புறநகர் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டன. இதன்படி, சென்னை கடற்கரை - தாம்பரம், செங்கல்பட்டு வழித்தடத்தில் இரு மார்க்கத்திலும் காலை 9.30 முதல் பிற்பகல் 1.30 மணி வரையும், இரவில் 10.40 முதல் 11.59 வரையும் புறநகர் ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டன.
மேம்பாட்டுப் பணிகள் நிறைவடையாத காரணத்தினால், புறநகர் ரயில் சேவை ரத்தானது மேலும் நான்கு நாள்களுக்கு நீட்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், பணிகள் அனைத்தும் நிறைவடைந்ததையடுத்து, இன்று பிற்பகல் முதல் அனைத்துப் புறநகர் ரயில்களும் வழக்கம்போல இயங்கத் தொடங்கின. வழக்கமான ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி புறநகர் ரயில்கள் இயங்கத் தொடங்கியுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.