
சென்னையில் பரவலாக கனமழை பெய்து வருவதால் தீபாவளி திருநாளை ஒட்டி மக்கள் பட்டாசு வெடிக்க முடியாத நிலை உருவாகியுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. குறிப்பாக தென் மாவட்டங்களிலும், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டியுள்ள மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்து வருகிறது.
இதற்கிடையில் அரபிக் கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் நாளை (அக்.21) தெற்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்து தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும் கணிக்கப்பட்டுள்ளது. இதனால், தமிழ்நாட்டின் 18 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது என்றும், நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களிலும், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் மாவட்டங்களிலும் இன்று கனமழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
சென்னையிலும் இன்று காலை முதலே பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது. பல பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்து வருவதால் தீபாவளி பண்டிகையை பட்டாசு வெடித்துக் கொண்டாட முடியாமல் சென்னை மக்கள் தவித்து வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த 2011-க்குப் பிறகு தீபாவளி அன்று சென்னையில் கனமழை பெய்து வருவதாக சுயாதீன வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். இதுகுறித்த அவரது எக்ஸ் தளப் பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-
“சென்னைக்கு இன்று எத்தகைய நாள்! கடந்த 2011-ல் தான் இன்றுபோல் சென்னையில் தீபாவளி அன்று இவ்வளவு கனமழை பெய்தது. ஓஎம்.ஆர், ஈசிஆர் பகுதிகள் உள்ளிட்ட தென் சென்னை பகுதிகளில் அதிக அளவில் மழை பெய்துள்ளது. சென்னையில் இன்று முழுவதும் மழை தொடரும். இதனால் தீபாவளி கொண்டாட்டத்தில் அவ்வப்போது இடைவெளிகள் இருக்கும். அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை தீபாவளி வாழ்த்துகள். பண்டிகை நாளை மழையுடன் கொண்டாடுங்கள்” என்று கூறியுள்ளார்.